சிந்தனைசெய் மனமே!
குறைவற்ற செல்வமே நில்! கொஞ்சம் நில்! வாழ்க்கைப்படிகளில் விரைந்தேறாதே! சற்று மெதுவாகச் செல்!
எதுவாயினும் சரியே, உனக்கு நலன் அளிக்கும் செயல்களில் விரைந்திடு! நலன் இல்லையேல் விரலையும் அசைக்காதே! இவ்வுலகில் ஏதோ பிறந்துவிட்டோம். சில நாள்களே இங்கு வாழப் போகிறோம். இறந்தபின் மீண்டும் இங்கு வருவதோ, இங்குள்ள இன்பங்களை அடையப்போவதோ இல்லை. எனவே, தனக்கு நலமானதை மட்டும் செய்து வெற்றியடைந்த அமரர்கள் வரிசையில் அமரவேண்டும் என எண்ணுகிறாயா? அல்லது நமக்கு நாமே தலைவன்; நாம் நினைத்ததே சட்டம்; எதையும் ஏன் எதற்கெனக் கேட்பார் யாரிருக்கிறார்? எதையும், எங்கும், எப்படியும் செய்யலாம். நமக்கு அழிவே இல்லை என எண்ணி இறுமாந்திருக்கிறாயா?
உனக்காக
மனிதா! நன்கு சிந்தனை செய்! பிறப்பையும் இறப்பையும் உன்னால் மறுக்க முடியுமா?
நீ வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வைத்தான் உன்னால் மறுக்கமுடியுமா?
நீ யார்...?
மனிதனா...?
நீ இங்கே எப்படித் தோன்றினாய்?
இதற்கு முன் நீ எங்கிருந்தாய்?
நீ இங்கு தோன்றிய நோக்கமென்ன?
இனி நீ செல்ல வேண்டிய இடம் எது?
அங்கு உன் நிலை எப்படி இருக்கும்?
என்பன போன்ற வினாக்களை உன் இதயம் எழுப்பவில்லையா?
சில நேரங்களில் எழுப்பும்! ஆனால், விடைதான் உனக்குக் கிடைப்பதில்லை போலும்...
விடை கிடைக்க வேண்டுமெனில் வீட்டிலொரு மூலையைத் தேர்ந் தெடு! அங்கு அமர்ந்து அமைதியாய் சிந்தி! விடை பெ ளச!! வெற்றியடைவாய்!
நீ காணும் உலகமென்பது என்ன?
உன் கண்களையும் மனதையும் மகிழச் செய்யும் பொருட்களை எண்ணிப் பார்?
தலையை உயர்த்து! வானத்தைப் பார்!
அதில் ஏதாவது பிளவைக் காண்கிறாயா?
அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?
அப்படியே பார்வையை கீழ்நோக்கித் திருப்பு!
எவ்வளவு பொருட்களைச் சுமந்து சுழல்கிறது, பூமி!
அது எங்ஙனம் விரிக்கப்பட்டுள்ளது, உனக்கு முன்னே பார்!
ஆம்! ஆங்காங்கே நெட்டை குட்டையாக மலைகள் உள்ளன.
இவை யாவும் எங்ஙனம் பிடிப்பாக நடப்பட்டுள்ளன என்பது உன் சிந்தனைக்கு எட்டவில்லையா?
சிந்திப்பாய் சிறப்படைவாய்!
உலகிற்கே ஒளி தரும் சூரியனும், நிலவும் ஒன்றையொன்று நெருங்கிக் கொள்ளவில்லை, நூலளவும் தடம் மாறாமல் அவை தம் வரையறைக்குள்ளே சீராகச் சுழல்கின்றன! அவற்றின் ஒத்துழைப் பின்றி மரம், செடி, கொடி போன்ற தாவரங்கள் யாவும் வளராது என்பதை நீ அறிவாய்! சில காலம் அவை மறைக்கப்பட்டால் உலகிலுள்ள பெரும் பான்மையான உயிரினங்கள் அழிந்துவிடும் என்பதையும் நீ அறிவாய்! அவற்றுக்குப் பதிலாக அவை போன்ற வற்றைப் படைக்கும் ஆற்றல் உனக்கு இருக்கிறதா!
கனி வகைகளையும், காய் வகைகளையும் இன்னும் மலர் வகை களையும் கொட்டித் தரும் தாவரங்கள் எவ்வளவு அற்புதமானவை, அவை எங்ஙனம் தோன்றியிருக்கும் என்பதைச் சிந்தித்தாயா?
இவையனைத்தும் முற்றிலும் அழிந்தொழிந்துவிடின் அவற்றை உருவாக்கும் திறன் உனக்கு உண்டா?
சிந்திப்பாய்!
உனக்கு மிகவும் அத்தியாவசியமானது நீர்!அது இல்லாமல் உன்னால் சில நாள்கள் உயிர் வாழமுடியுமா?
நீர் இல்லையெனில் நீ மட்டுமல்ல உலகில் உள்ள உயிரினங்கள் பலவும் வாழமுடியாதே!
உன்னைத் தனியறையொன்றில் சில நாள்கள் அடைத்து வைத்து, தண்ணீர் கொடாமல் உன்னைத் தவிக்க விட்டப் பிறகு ஒரு குவளைத் தண்ணீரும் பெருஞ் செல்வமும் உன் முன் வைக்கப்பட்டு, “இவ் விரண்டில் ஏதாவது ஒன்று மட்டுமே உனக்குக் கொடுக்கப்படும். இதில் எது தேவை” என வினவினால் எதைத் தேர்ந்தெடுப்பாய்?
செல்வத்தைத் தானே?
ஓ... தண்ணீரையா!
ஆக, ஒரு குவளை தண்ணீரின் விலையை எவரும் நிர்ணயம் செய்யவே முடியாது. அவ்வளவு விலைமதிக்க முடியாத செல்வம் தான் தண்ணீர்; ஏற்றுக்கொண்டாயல்லவா? அது எவ்வாறு தோன்றியிருக்கும் என்பதை சிந்தித்ததுண்டா? சிந்திப்பின் சிதையமாட்டாய்!
காற்று!
நீ வாழ சுவாசிக்கிறாயே அக்காற்றை ஐந்து நிமிடங்களுக்கு மட்டும் நிறுத்தி விட்டால் உனக்கு என்ன நேரும் தெரியுமா?
பதில் கூறு! ஏன் மௌனமாய் இருக்கிறாய்?
காற்றே செல்லாத அறையொன்றில் உன்னை அடைத்து வைத்து, “கவலையற்றிரு மகனே!” எனக் கூறினால், என் சொத்துக்களை எல்லாம் கொடுத்து விடுகிறேன்; என் மனைவி, மக்கள் அனை வரையும் அடிமையாக்கி நானும் அடிமையாகிவிடுகிறேன்; என்னை இவ்வறையிலிருந்து வெளியேற்றுங்கள்” என்றல்லவா கூறுவாய்? ஒரு நிமிடம் காற்று இல்லையென்றால் உன் நிலை இவ்வளவு மோசமாகிவிடுகிறதே! அது நிரந்தரமாக நின்று விட்டால் உன் நிலை என்னவாகும்? அவ்வாறான காற்றை உருவாக்கியது யார் என்பது போன்ற சிந்தனையே உனக்கு வருவதில்லையா?
மனிதா! ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் அற்புதங்களை நினைத்துப் பார்!
உதிரம், சாணம், சிறுநீர் ஆகிய அசுத்தங்களுக்கிடையில் குடிப் போருக்கு மகிழ்வூட்டக் கூடிய சுத்தமாக சுவையான, சத்தான பாலை எவ்வாறு கால் நடைகள் பிரித்துக் கொடுக்கின்றன? இவை போன்ற அற்புதப் படைப்பினங்கள் தோன்றியுள்ளனவே, எங்ஙனம்? சிந்தித்துணர்வாய்!
உனக்கு
எங்கே விரைந்தோடுகிறாய் நண்பா? சற்று நில்! உன் விழியின் ஒளியை உன் கால் விரல்களிலிருந்து உச்சந்தலை வரை நன்றாகச் செலுத்து! ஓ... தலையை எப்படிப் பார்ப்பதா? அட, கண்ணாடியில் முகத்தைக் காண்பித்துப் பார்! பார்த்துவிட்டாயா? இரண்டு கால்கள் உள்ளனவே! அவற்றை இயக்கிப் பார்! எங்கெல்லாம் செல்கிறாய்? இரண்டு கைகளையும் தொட்டுப் பார்! இயக்கிடு! அவற்றைக் கொண்டு என்னவெல்லாம் செய்கிறாய்? உன் நாவைப் பார்! அது எவ்வளவு திறன் கொண்டதாக உள்ளது? அது செயலிழந்து விட்டால்? உன் மூக்கைப் பார்! அது எவ்வளவு அருமையாகக் காற்றைச் சுவாசித்து நீ உயிர் வாழ் வதற்குத் துணை செய்கிறது! உன் விழிகள்! ஆமாம்! விழித்துப் பார்! என்னவெல்லாம் தெரிகின்றன? உன் இதயம்..!
உனக்கருளப்பட்டுள்ள செவி ஆச்சரியத்திற்குரியதாய் இல்லையா?
அவை செயல்படுகிற விதம் வியப்பைத் தருகிறதல்லவா?
அவை செயலற்றுப் போய்விட்டால் உன் நிலை!?
நீ உயிர் வாழ ஓயாமல் துடிக்கும் இயந்திரமல்லவா அது?
அது எவ்வாறு இயங்குகிறதெனச் சிந்தித்தாயா? சீரானவன் சிந்திப்பான்; சிந்தித்தோன் சீரடைவான்! சீரடைவோன் சிறப்படைவான் என்பதை மனதில் வை!
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!