பொறுமையாளராய் இருங்கள்
நீங்கள் கண்ணாடியின் முன்னால் நிற்கும்போது அது, உங்களிடம் கோபத்துடனும் பிறரிடம் பொறுமை யுடனும் நடந்து கொள்வதில்லை. அதன் முன்னால் யார் நின்றாலும் ஒரே மாதிரியாகத்தான் அது நடந்து கொள் கிறது. நீங்கள் உங்களின் சகோதரர்களில் யாரைச் சந்தித்தாலும் கண்ணாடியைப் போன்றே நடந்து கொள்ளுங்கள். ஒருவரிடம் கடுகடுப்புடனும் மற்றவரிடம் கலகலப்புடனும் நடந்து கொள்ளாதீர்கள்; இது முறை யாகாது. நீங்கள் உங்களின் சகோதரருக்குக் கண்ணாடி என்றால் உங்களைப் பொறுத்தவரையில் எல்லோரும் உங்களுக்குச் சமம் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் மனோஇச்சைக்குக் கட்டுப்பட்டவராய் இவர்
எனக்குப் பிடித்தவர்; அவர் எனக்குப் பிடிக்காதவர் என யாரையும் தரம் பிரிக்காதீர்கள். இவ்வுரிமை உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை.
கோபத்தைத் தவிர்த்து எல்லோருடனும் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக இதற்கு பெரும் பலன் இருக்கிறது. மறுமையில் பெரும் பலன் கிடைப்பது மட்டுமல்லாமல் இம்மையிலும் சில பலன்களை நீங்கள் அடைவீர்கள்.
நம்பிக்கையாளர்களே! பொறுமையுடன் இருங்கள்! சகித்துக் கொள்ளுங்கள்! வலுப்படுத்திக் கொள்ளுங்கள்! இறைவனை அஞ்சுங்கள்! வெற்றியடைவீர்கள்!
திருக்குர்ஆன் 3:200
பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். உண்மையில் உள்ளச்சம் உடையோரைத் தவிர (மற்றவருக்கு) இது பெரும் பாரமாகவே இருக்கும்.
திருக்குர்ஆன் 2:45
இறைநம்பிக்கையாளர்களே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்! பொறுமையாளர்களுடன் ஏக இறைவன் இருக்கிறான்.
திருக்குர் ஆன் 2:153
உங்களுக்குத் ஒரு துன்பம் வரும்போதுதான் நீங்கள் பொறுமையாளரா இல்லையா என்பதைச் சோதிக்க முடியும். எதுவுமே ஏற்படாதிருக்கும்போது நீங்கள் பொறுமையாளராகத்தான் இருப்பீர்கள். அது ஒரு சாதனை அல்ல. இறைவனின் சோதனை மற்றும் பிறரிடம் இருந்து ஏற்படும் துன்பங்களைச் சகித்துக் கொள்ளுங்கள்.
"பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட உடன் (கைக் கொள்வதே" என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
அறிவித்தவர்: அனஸ்(ரலி)
நூல்: ஸஹீஹ் அல் புகாரீ, ஹதீஸ் எண்: 1469 1302
எனக்கு பொறுமையே இல்லை; என்னால் எதையும் பொறுத்துக் கொள்ளமுடியாது என்ற எண்ணத்தைத் தூக்கி எறியுங்கள். நீங்கள் பொறுமையாளராய் இருக்க வேண்டுமென விரும்பினால் இறைவன் வழிவகுப்பான்.
"...பொறுமையை மேற்கொள்ள முயற்சிப்பவனை பொறுமையாளனாகவே இறைவன் ஆக்கிவிடுகிறான். பொறுமையைவிடச் சிறந்த விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை” என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
அறிவித்தவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்: ஸஹீஹ் அல் புகாரீ, ஹதீஸ் எண்: 1469
குற்றத்தை ஒப்புக் கொள்ளுங்கள்
நீங்கள் கண்ணாடிக்கு முன்னால் நிற்கும்போது அது உங்களின் குறைகளை எடுத்துக் காட்டுகிறது. அப்போது, என்னையா குற்றம் சுமத்துகிறாய் என கண்ணாடியை நீங்கள் அடித்து உடைத்து விடுவதில்லை. கண்ணாடி யுடன் வாதிடுவதில்லை. அதன் மீது கோபம் கொள்வ தில்லை. இப்படி எல்லாம் நீங்கள் செய்தால் உங்களுக்கு ஏதோ ஆகிவிட்டது என்றே பிறர் முடிவுக்கு வருவார்கள். உங்களிடம் காணப்படும் குறைகளை அது எடுத்துரைக்கும் போது முழுமனதுடன் நீங்கள் அவற்றை ஒப்புக் கொள் கிறீர்கள். அப்போது நீங்கள் மழுப்புவதில்லை. அல்லது குறை இருந்தால் என்ன; இல்லாவிட்டால் என்ன என்று கண்டுகொள்ளாமலும் இருப்பதில்லை.
உங்களின் சகோதரனுக்கு கண்ணாடியாய் இருக்கிறீர்கள் என்பதுபோல உங்களின் சகோதரரும் உங்களுக்குக் கண்ணாடியாய் இருக்கிறார். அவரிடம் காணப்பட்ட குறைகளை நீங்கள் எடுத்துரைத்தபோது அவர் திருந்த வேண்டும் என நீங்கள் விரும்பினீர்கள். இப்போது உங்களிடம் காணப்படும் குறைகளை அவர் எடுத்துரைக் கிறார். நீங்கள் திருந்த வேண்டும் என அவர் விரும்பு கிறார். எனவே, அவர் எடுத்துரைக்கும் குறைகள் அவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் மாசற்ற மனதுடன் ஒப்புக்கொள்ளுங்கள். வாதிடாதீர்கள்; நியாயப்படுத்த முயலாதீர்கள்; சண்டையிடாதீர்கள்; உங்களின் குற்றங் களை நீங்கள் ஒப்புக் கொள்ளும் பக்குவம் உங்களிடம் வந்துவிட்டால் நீங்கள் உயர்ந்துவிடுவீர்கள். அதன் பிறகு உங்களை இறைவனைத் தவிர யாராலும் வீழ்த்தமுடியாது.
பாவங்களை பகிரங்கப்படுத்தாதீர்கள்
கண்ணாடிக்கு முன்னால் நீங்கள் நிற்கும்போது கண்ணாடி மறைத்திருக்கும் தன்னுடைய குற்றங்களை உங்களிடம் பகிரங்கப்படுத்துவதில்லை. நான் என் குற்றங்களை ஒப்புக் கொள்கிறேன் என்ற பெயரில் நீங்கள் மறைவில் செய்யும் குற்றங்களை நீங்களாக முன்வந்து வெளிப்படுத்தாதீர்கள். நீங்கள் மறைவாகச் செய்யும் பாவங்களை இறைவன் மன்னித்து விடுகிறான். அதற்காக இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி திருந்துங்கள். மீண்டும் அக்குற்றத்தைச் செய்யத் துணியா தீர்கள். உங்கள் குற்றங்களை நீங்களாக வெளிப்படுத்துவது பிறரையும் அதுபோன்ற குற்றங்களைச் செய்யத் தூண்டலாம். அது உங்களுக்கு தண்டனையை அளித்துவிடும். “என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகிறவர்களைத் தவிர ஒருவர் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்துவிட்டுப் பிறகு காலை யானதும் அல்லாஹ் அவனுடைய பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிட்டிருக்க, 'இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்" என அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியா மல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்ச மாக்கி விடுகிறான்” என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
அறிவித்தவர்: அபூ ஹுரைரா(ரலி) நூல்: ஸஹீஹ் அல் புகாரீ, ஹதீஸ் எண்: 6069
“உங்களில் ஒருவர் தம் இறைவனை (மறுமையில்) நெருங்குவார். எந்த அளவிற்கு என்றால் இறைவன் தன் திரையை அவரின் மீது போட்டு (அவரை மறைத்து) விடுவான்.
"நீ (உலகத்தில்) இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?” என இறைவன் கேட்பான்.
“ஆம்” என அவர் கூறுவார்.
"இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?” என இறைவன் (மீண்டும்) கேட்பான்.
“ஆம்” என அவர் கூறி தம் (பாவச்) செயல்களை ஒப்புக் கொள்வார்.
“இவற்றையெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியா மல்) மறைத்திருந்தேன். இன்று அவற்றிலிருந்து உன்னை மன்னித்துவிடுகிறேன்' என இறைவன் கூறுவான்” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
அறிவித்தவர்: இப்னு உமர்(ரலி)
நூல்: ஸஹீஹ் அல் புகாரீ, ஹதீஸ் எண்: 6070
குற்றத்திற்காக வருந்துங்கள் ! திருந்துங்கள்!!
கண்ணாடிக்கு முன்னால் நீங்கள் நின்று, அது உங்களின் குறையை எடுத்துரைத்தால் உடனடியாக அதைத் திருத்திக் கொள்வதற்குத் தயாராகிறீர்கள். உங்களின் சகோதரர் உங்களுக்குக் கண்ணாடி, அவர் உங்களிடம் காணப்படும் குறையைச் சுட்டினால் முழுமனதுடன் அதை ஏற்றுக் கொண்டு திருத்திக் கொள்வதற்குத் தயாராகுங்கள். வருத்தப்படுவது மட்டும் தீர்வாகாது. திருந்துவதுதான் தீர்வாகும். ஆனால், மனம் உடைந்து விடாதீர்கள்; நிராசையடைந்துவிடாதீர்கள்.
மனிதன் தவறு செய்யக்கூடியவன்தான். நீங்கள் தவறே செய்யாமல் வாழமுடியாது. அப்படியானால் நீங்கள் வானவராகத்தான் இருக்க வேண்டும். எனவேதான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்வருமாறு கூறினார்கள்.
“ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்யக் கூடியவர்களே! அவர்களில் சிறந்தவர்கள் தம்முடைய பாவங்களுக்காக மனம் வருந்தி திருந்துபவர்கள் ஆவர்” என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
அறிவித்தவர்: அனஸ்(ரலி)
நூல்: திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இறையருளைவிட்டும் நிராசை அடைந்து விடாதீர்கள். இறைவன் பாவங்களை மன்னிப்பவன்; கருணையாளன்.
“தமக்குத்தாமே தீங்கிழைத்துள்ள என் அடியார்களே! ஏக இறைவனின் அருளில் நம்பிக்கையிழக்காதீர்கள்! ஏக இறைவனே பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கிறான். அவனே மிக்க மன்னிப்பவன்; நிகரற்ற கருணையாளன்” எனக் கூறும்.
எனவே, (மனிதர்களே!) உங்களுக்கு தண்டனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இரட்சகனின்பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்! (தண்டனை வந்த) பின்னர் உதவப்பட மாட்டீர்கள்.
திருக்குர் ஆன் 39:53, 39:54
புரட்சியின்றி புதிய உலகம்
இன்றைய உலகம் பொறாமை, போட்டி, வஞ்சகம், பகைமை, சுயநலம் முதலியவற்றால் சூழ்ந்துள்ளது. மனிதன் மனிதனை அழித்தொழிக்கும் அவல நிலைக் காணப்படுகிறது. மனிதம் மதிக்கப்படுவதில்லை. அன்பு பரிமாற்றங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பொருள் முதல்வாதமே மனிதனின் குறிக்கோளாய் உள்ளது. மனிதன் மனிதனாக வாழ்வதற்கும் அனுமதிக் காமல் அமைதிக்கு எதிராக எதிர்ப்பலை வீறுநடை போடுகிறது.
அமைதியை நிலைநிறுத்துகிறோம் என்ற பெயரில் ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது படை எடுப்பதும், அங்குள்ள குழந்தைகள், பெண்கள், நோயாளிகள், வயோதிகர்களைக் கொன்று குவிப்பதும் அந்நாட்டு வளங்களை கொள்ளையடிப்பதும் இன்று சர்வ சாதரணமாகிவிட்டது. இந்நிலை மாறுமா என பாதிப் பிற்குள்ளான நெஞ்சங்கள் பரிதவிக்கின்றன.
மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்பது மறைந்து எப்படியும் வாழலாம் என்ற மனநிலைக்கு மனிதர்கள் மாற்றப்பட்டுவருகிறார்கள். வாழும் கலை மனிதனுக்குத் தெரிவதில்லை. மனிதத்தை அழித்தொழிக்கும் கலைதான் இன்று கொடிகட்டிப் பறக்கிறது. இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு ஒரு புரட்சி தேவை என சூலுரைக் கப்படுகிறது.அமைதிவேண்டும் ஒரு கூட்டம் அமைதியைக் கெடுத்து வருகிறது. உலக அமைதிக்கு உத்திரவாதம் தனி மனிதனின் மாற்றத்தில்தான் இருக்கிறது. தனி மனிதன் மாறும்போது அவன் சார்ந்துள்ள குடும்பம் மாறுகிறது. அவனுடைய குடும்பம் மாறும்போது அவன் வசிக்கும் பகுதி மாறுகிறது. அவன் வசிக்கும் பகுதி மாறும்போது அவன் வசிக்கும் நாடு மாறுகிறது. இப்படி ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பம் தன் பகுதி என மாற்றத்திற்குத் தயாராகும்போதுதான் உலகமே மாற்றத்திற்குத் தயாராகும். இந்த மகத்தான மாற்றம் அமைதியாக நடப்பதற்கு நீங்கள் உங்களின் பங்காக பிறரை உங்களின் கண்ணாடியாய் நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள். நீங்களும் பிறருக்குக் கண்ணாடியாய் இருங்கள். வெற்றி நிச்சயம். புரட்சியின்றி நாம் ஒரு புதிய உலகத்தை உருவாக்கலாம்; இறைவன் நாடினால்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!