உண்மையாளராய் இருங்கள்!

 


உண்மையாளராய் இருங்கள்


நீங்கள் இப்போது கண்ணாடிக்கு முன்னால் நின்றிருக் கிறீர்கள். அது உங்களிடம் உரையாடுகிறது. உங்களிடம் மட்டும்தான் உரையாடுகிறது. உங்கள் தொடர்பான உண்மைகளை வைத்தே உரையாடுகிறது. உங்களிடம் அது பொய்யுரைக்கவில்லை. நீங்கள் உங்கள் முகத்தைக் காட்டுகிறீர்கள். அது உங்கள் முகம் என்றே சொல்கிறது. உங்கள் உடலின் வலப்பக்கத்தை நீங்கள் காட்டினால் அது இடப்பக்கத்தை உங்களிடம் காட்டாது. உங்கள் முகத்திலோ, உடலிலோ அல்லது ஆடையிலோ உள்ள குறையைச் சுட்டுகிறது. நீங்கள் அழகிய அலங்காரத்துடன் இருப்பின் அதையும் சரியாகச் சுட்டுகிறது.




அதேபோல் நீங்களும் உங்களின் சகோதரருக்குக் கண்ணாடியாய் இருங்கள்! அவரிடம் நீங்கள் காணும் நிறைகுறை குறித்த கலப்பற்ற உண்மையைச் சொல்லுங்கள். அவரிடம் நீங்கள் காணும் குறையை மனதில் புதைத்து வருத்தத்துடன் வாழாதீர்கள். அவரைக் காணும் போதெல்லாம் அந்தக் குறை உங்கள் ஞாபகத்திற்கு வரக்கூடாது. நேரடியாக உண்மையை எடுத்துரைத்து குறைக்கு முற்றுப்புள்ளியிடுங்கள்.


உங்களின் சகோதரரிடம் நிறை இருப்பின் பாராட்டுங்கள். ஆனால் வரம்பு மீறி புகழ்ந்து தள்ளாதீர்கள்.


ஒருவர் இன்னொரு மனிதரை அளவு கடந்து புகழ்ந்து கொண்டிருந்ததைச் செவியுற்றபோது, "அந்த மனிதரின் முதுகை 'அழித்துவிட்டீர்' என்றோ 'ஒடித்து விட்டீர்" என்றோ (கடிந்து) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


அறிவித்தவர்: அபூ மூஸா(ரலி)


நூல்: ஸஹீஹ் அல் புகாரீ, ஹதீஸ் எண்: 6060


ஒரு மனிதர் குறித்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகில் பேசப்பட்ட போது ஒருவர் அவர் குறித்து புகழ்ந்துரைத்தார். உடனே, “உனக்குக் கேடுதான். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீரே!” என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பல முறை கூறினார்கள். பிறகு, “உங்களில் ஒருவர் (தம் சகோதரரைப்) புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், '(அவர் குறித்து) நான் இன்னின்ன விதமாக எண்ணுகிறேன்' என்று (மட்டும்) கூறட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகக்


கருதினால் மட்டுமே கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவனாய் இருக்கிறான். அல்லாஹ்வை முந்திக் கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று (யாரும்) கூற வேண்டாம்" என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


மற்றோர் அறிவிப்பில்,"(தம்முன் புகழ்ந்தவரைப் பார்த்து) உனக்கு அழிவுதான்” என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் என உள்ளது.


அறிவித்தவர்: அபூ பக்ரா நுஃபைவு இப்னு ஹாரிஸ்(ரலி) நூல்: ஸஹீஹ் அல் புகாரீ, ஹதீஸ் எண்: 6061


குறையை சம்பந்தப்பட்டவரிடமும் நிறையைப் பிறரிடமும் சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களின் சகோதரரும் உங்களுக்குக் கண்ணாடி என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் அவருடன் நடந்து கொள்ளும் முறைப்படிதான் அவர் உங்களுடன் நடந்து கொள்வார் என்பதை கவனத்தில் வையுங்கள்.


தான்தோன்றித்தனமாகப் பேசினால், ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் என்பார்கள். உங்களின் சகோதரரிடம் உண்மையை மட்டுமே பேசுங்கள். பொய்யை அடியோடு அழித்துவிடுங்கள்.


பொய் பெரும் பாவங்களின் ஆணிவேராகும். நீங்கள் ஒரு பொய்யுரைத்தால் அதை மறைப்பதற்கு பல பொய் கள் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இறுதியில் நீங்கள் பெரும் பொய்யராகவே மாறிவிடுவீர்கள்.


உண்மையும் பொய்யும் கலந்து பேசும் பண்போ, பொய்யுரைக்கும் பண்போ உங்களிடம் இருக்கக்கூடாது.


நீங்கள் அறிந்துகொண்டே சத்தியத்தை அசத்தியத்தோடு கலக்காதீர்கள்; சத்தியத்தை மறைக்கவும் செய்யாதீர்கள்.


திருக்குர் ஆன் 2:42


உண்மையில் நிலைத்திருங்கள். ஏனெனில், உண்மை நன்மையின் பக்கம் கொண்டு செல்கிறது. நன்மை, சுவர்க்கத்திற்குக் கொண்டு செல்கிறது. மனிதன் எப் போதும் உண்மையையே பேசிக்கொண்டு உண்மையைத் தேடிக்கொண்டே இருந்தால், அவனை உண்மையாளர் களில் ஒருவனாகவே இறைவன் எழுதுகிறான். பொய் பேசுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், பொய் தீயவழியில் கொண்டு செல்கிறது. மேலும், தீயவழி நரகத்திற்குக் கொண்டு செல்கிறது. மனிதன் எப்போதும் பொய்யே பேசிக்கொண்டு பொய்யின் தேட்டத்திலேயே இருந்தால், அவனைப் பொய்யர்களில் ஒருவனாகவே இறைவன் எழுதுகிறான்" என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


அறிவித்தவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்:ஸஹீஹ் அல் புகாரீ, ஹதீஸ் எண்: 6094, முஸ்லிம்


எச்சரிக்கையாய் இருங்கள்; பிறர் சிரிப்பதற்காகக் கூட பொய்யுரைக்காதீர்கள்!


"மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்ப வனுக்குக் கேடுதான். அவனுக்குக் கேடுதான். அவனுக்கு கேடு தான்" என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


அறிவித்தவர்: பஹ்ஜ் இப்னு ஹகீம்(ரலி) நூல்: அபூதாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ


எச்சரிக்கையாய் இருங்கள்; நீங்கள் பொய்யுரைத்தால் நயவஞ்சகராகிவிடுவீர்கள்.

"நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று 1. அவன் பேசினால் பொய்யே பேசுவான். 2. அவன் வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான். 3. அவனிடம் ஒரு பொருள் அல்லது பணி தொடர்பான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வான்” என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


அறிவித்தவர்: அபூ ஹுரைரா(ரலி)


நூல்: ஸஹீஹ் அல் புகாரீ ஹதீஸ் எண்: 33, 34, முஸ்லிம்.


நீங்கள் பேசும் உண்மை அவரை நல்ல பண்பாளராக மாற்றியமைக்க வேண்டும். அவர் பேசும் உண்மை உங்களை உயர்ந்த பண்பாளராய் ஆக்கவேண்டும்.


நேர்மையாளராய் இருங்கள்


அஞ்சுதல் அஞ்சாமை; இது உங்களின் முதல் பண்பாக இருக்க வேண்டும். உண்மையை எடுத்துரைப்பதில் உங்களின் அஞ்சுதல் இறைவனுக்கு மட்டுமே இருக்க வேண்டும். உங்களின் அஞ்சாமை இறைவனைத் தவிர வேறு யாருக்காவும் இருக்கக்கூடாது. நீங்கள் இறை நம்பிக்கையாளர் என்பதை மறந்துவிடாதீர்கள்.


எப்போதும் நேர்மையாளராய் இருங்கள். உள்ளங் கவர்ந்தவரின் குறைகளுக்கும் உங்களுக்கும் இடையில் திரையிடாதீர்கள். அவரின் குறைகளுக்கும் பிறருக்கும் இடையில் திரையிடுங்கள். கண்ணாடிக்கு முன்பாக யார் நின்றாலும் நிற்பவரிடம் காணப்படுகிற குறைகளை அவரிடமே அது சுட்டுகிறது. இவர் வேண்டியவர் வேண்டாதவர் என அது யாரையும் பாகுபடுத்துவ தில்லை. நீங்கள் மனிதர்களுக்குக் கண்ணாடியாய் இருக்கிறீர்கள். நீங்கள் யாரையும் பாகுபடுத்தாதீர்கள்.


குற்றவாளிகளின் அதிகாரத்திற்கு பணியாதீர்கள். விருப்புவெறுப்புக்கு இடம் தராதீர்கள். சத்தியத்தில் நிலைத்திருங்கள். இறுதியில் சத்தியமே வெல்லும் என்பதை மறக்காதீர்கள்.


அக்கிரமம் புரிபவன் அரசனாய் இருந்தாலும் அவனிடம் அது அக்கிரமம் என்பதை எடுத்துரையுங்கள். அவன் திருந்துவதற்கான வழியைக் காட்டுங்கள்.


இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஜம்ராவின் மீது கல்லெறிந்து கொண்டிருந்தபோது ஒருவர் வந்து, இறைத்தூதர் அவர்களே! கண்ணியமும் மகத்துவமும் மிக்க இறைவனிடம் சிறந்த ஜிஹாத் (அறப்போர்) எது எனக் கேட்டார். இரண்டாம் 'ஜம்ரா' வை அடையும் வரை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மௌனமாய் இருந்தார்கள். அவர் மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூன்றாம் 'ஜம்ரா'வை அடையும் வரை மௌனமாய் இருந்தார்கள். மூன்றாம் ஜம்ராவை அடைந்ததும் அவர் அதே கேள்வியை மறுபடியும் கேட்டார். “அதிகாரம் படைத்த அரசனிடம் நீ சத்தியத்தை எடுத்துரைப்பது” என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதிலளித்தார்கள்.


அறிவித்தவர்: அபூ உமாமா(ரலி)


நூல்: அஹ்மத் மற்றும் இப்னு மாஜா

கருத்துகள்