சமுதாயம் எதிர்கொள்ளும் ஆபத்துகள்
1) காஃபிர்கள் அந்த சினிமாக்களிலும், சீரியல்களிலும் பெரிய ஹீரோக்களாக காட்டப்படுகிறார்கள். அதன் வழியாக அவர்களைப் பற்றிய மதிப்பு மரியாதையும் பிரமிப்பும் பார்ப்பவர்களின் உள்ளங்களிலே ஏற்படுத்தப்படுகிறது.
2) குற்றச் செயல்கள் பரப்பப்படுகின்றன. குற்றங்களை செய்யத் தூண்டும் காட்சிகள் இடம் பெறுகின்றன. உதாரணமாக: கற்பழிப்பு, பலாத்காரம், கொலை, கொள்ளை, தற்கொலை, கடத்தல், வன்முறை போன்ற காட்சிகள் காட்டப்படுவது. பார்ப்பவர்களை அவற்றின் பக்கம் தூண்டுகின்றன.
3) இதுபோன்ற குற்றச் செயல்களைப் பார்த்து வளருகின்ற சமுதாயங்களில் உள்ள பலர் அக்குற்றச் செயல்களை பழக்கமாக்கிக் கொள்கின்றனர்.
4) திருடுவது. கடத்துவது. ஏமாற்றுவது, பொருளையோ சொத்தையோ பறிப்பது. இலஞ்சம் வாங்குவது, மோசடி செய்வது, புகைப்பது, மது குடிப்பது போன்ற பல சமூகச் சீர்கேடுகள் பகிரங்கமாகக் காட்டப்படுகின்றன. இதனால் அவற்றை அதுவரை தெரிந்திருக்காதவர்கள் கூட அவற்றைக் கற்றுக்கொண்டு, அந்தத் தீய காரியங்களைச் செய்யத் தொடங்கி விடுகின்றனர்.
5) பெண்களைப் போன்று ஆண்களும், ஆண்களைப் போன்று பெண்களும் நடந்து கொள்ள தூண்டப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இதை வன்மையாகக் கண்டித்துள்ளார்கள் என்பதை நாம் முன்பே அறிந்தோம். சில ஆண்கள் தாங்கள் சினிமாக்களில் பார்க்கும் பெண்களைப் போன்று பேசவும் நடக்கவும் செய்கிறார்கள்.
சவரிமுடியையும் நகைகள் மற்றும் பெண்ணுக்குரிய அலங்காரங்களையும் அணிந்து கொள்கிறார்கள். இதே போல் சில பெண்கள் அந்த ஆண்களைப் போன்று தாடியையும் மீசையையும் வாங்கி அணிகிறார்கள். அவர்களைப் போல் தங்களது குரல்களையும் கடினமாக்கிக் கொள்கிறார்கள்.
இப்படி சினிமாவில் பார்க்கப்படும் காட்சிகளைத் தங்களது சமூகத்திற்கு மத்தியிலும் செயல்படுத்த நினைக்கும்போது ஏற்படும் விபரீதத்தை சிந்தித்துப் பாருங்கள்.
6) அல்லாஹ்வின் தூதர் அவர்கள், நபித்தோழர்கள், சிறந்த மார்க்க அறிஞர்கள். அல்லாஹ்வின் பாதையில் போரிட்ட தியாகிகள் போன்றோரைத் தங்களுக்கு முன்மாதிரிகளாகவும் வழிகாட்டிகளாகவும் ஆக்கிக் கொள்வதற்குப் பதிலாக நடிகர்களையும் பாடகர்களையும் கூத்தாடுபவர்களையும் விளையாட்டுக்காரர்களையும் முன்மாதிரிகளாக, வழிகாட்டிகளாக ஆக்கப்படுகிறது.
7) சினிமா சீரியல்களில் மூழ்கிவிடுகின்றவர்கள் குடும்பப் பொறுப்புகளையும் குடும்பத்தினரின் அவசியத் தேவைகளையும் அலட்சியம் செய்கின்றனர். வீட்டிலிருக்கும் நோயாளிகளைக்கூட கவனிக்க முடியாத சூழ்நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது.
8) பிள்ளைகள் பெற்றோர்களுக்கு மாறுசெய்யத் துணிகிறார்கள். பிள்ளைகள் தந்தைக்கு வாங்கி வரும் பொருட்களுக்குக் கூட, அதற்குரிய கிரயத்தைக் கேட்டுப் பெறுகிறார்கள். தந்தை அதற்குரிய கிரயத்தைக் கொடுக்க வில்லையென்றால் அதை உரிமை மீறுதல், அபகரித்தல் என்று கருதுகிறார்கள்.
ஒருவர் நபி அவர்களிடம் தனது தந்தை தன் அனுமதியின்றி தன் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறினார். அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: "(அப்பொருட்கள் மட்டுமல்ல;) நீயும் உன் செல்வமும் உனது தந்தைக்கே (சொந்தம்)!" (ஸுனன் அபூதாவூது)
9) உறவினர்களைச் சந்திப்பது, அவர்களுடைய சுக துக்கங்களில் கலந்து கொள்வது துண்டிக்கப்படுகிறது; சில சமயங்களில் சந்திப்பு ஏற்பட்டாலும் குடும்ப நிலவரங்களைப் பற்றி பேசாமல் தொலைக்காட்சிக்கு முன் எல்லோரும் வாய்மூடி அமைதியாக உட்கார்ந்து விடுகிறார்கள்.
10) விருந்தினரை முறையாக உபசரிப்பதில்லை; கண்ணியப்படுத்துவதில்லை; அதில் பல குறைபாடுகள் ஏற்படுகின்றன.
11) இத்தொலைக்காட்சி சாதனங்கள் நேரங்களை அதிகம் அழித்து விடுவதால், சோம்பேறித்தனமும் பொறுப்பற்ற தன்மையும் அதிகமாகி ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட முடிவதில்லை.
12) கணவன் மனைவி இருவருக்கிடையில் கருத்து வேறுபாடுகள், வெறுப்புகள், கோப தாபங்கள் அதிகமாகின்றன. உதாரணமாக: கணவன் தொலைக் காட்சியில் வரும் பெண்ணைப் பற்றி வருணிக்கும் போது அதற்குப் போட்டியாக அங்குள்ள மனைவி, தொலைக் காட்சியில் வரும் ஆணின் அழகை வருணிக்கிறாள்.
13) மிக அவசியமான உணர்வாகிய ரோஷம் அழிக்கப்படுகிறது. அதாவது, ஆண் பெண் கலந்துறவாடுவதைத் தொடர்ந்து பார்க்கப்படுவதால் மனைவி, பெண் பிள்ளைகள், சகோதரிகள் ஆகியோர் வெட்க உணர்வின்றி அன்னிய ஆண்களுக்கு முன்பு தோன்றும் கலாசாரம் உருவாகி விடுகிறது. பிறகு, இதைப் பெண்கள் தங்களின் சுதந்திரம் என்பதாகக் கருத ஆரம்பிக்கிறார்கள்.
நற்பண்புகளுக்கு ஏற்படும் ஆபத்துகள்
1) தொலைக்காட்சிகளில் வரும் பெண்களை ஆண்கள் பார்க்கும்போதும் ஆண்களை பெண்கள் பார்க்கும் போதும் தகாத இச்சைகள் தூண்டப்படுகின்றன.
2) மறைக்கப்பட வேண்டிய இடங்களை மறைக்காமல் ஆபாசமான ஆடைகளை அணியும் பழக்கம் ஏற்படுகிறது.
3) ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் முறையற்ற தொடர்புகளையும் நட்புகளையும் ஏற்படுத்திக்கொள்ள வழிகள் காண்பிக்கப்படுகின்றன. ஒரு பெண்ணை எப்படி கவரலாம். அவளுடன் எப்படி பேசலாம், எப்படி பழகலாம் என்று கற்றுக் கொடுக்கப்படுகிறது.
4) விபச்சாரமும் மானக்கேடான செயல்களும் பரப்பப்படுகின்றன. அவற்றில் பார்க்கும் காட்சிகளைப் போன்று இயல்பு வாழ்க்கையிலும் செயல்படுத்த விரும்புகின்றனர்.
5) பெண்களுக்கு அசிங்கமான நடனங்களின் மீது ஆர்வமூட்டப்படுகிறது.
6) காமெடி படங்களை ஒருவர் தொடர்ந்து பார்க்கும்போது அவரின் வீரமும் கம்பீரமும் எடுபட்டு விடுகின்றன.
7) சினிமா சீரியல்களில் பயன்படுத்தப்படுகின்ற அசிங்கமான அருவருப்பான வார்த்தைகள் மக்கள் மத்தியில் பரவுகின்றன.வணக்க வழிபாடுகளுக்கு ஏற்படும் ஆபத்துகள்
1) இரவில் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் சுபுஹுத் தொழுகை வீணடிக்கப்படுகிறது.
2) தொழுகையின் நேரங்கள் தாமதப்படுத்தப்படுகின்றன. ஆண்கள் மஸ்ஜிதுக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர். சீரியல், சினிமா, விளையாட்டு போன்றவற்றைப் பார்க்கும்போது, தொழுகைக்காக மஸ்ஜிதுக்குச் சென்றால் அவை தவறிவிடும் என்று எண்ணுகிறார்கள்.
3) வணக்க வழிபாடுகள் மீது வெறுப்பு ஏற்பட காரணமாகிறது. உதாரணமாக, தொழுகைக்காக விளையாட்டுக் காட்சிகள் நிறுத்தப்பட்டால், அதனால் தொழுகைகளை வெறுக்கிறார்கள்.
4) நோன்பாளி இப்பாவத்தில் ஈடுபடுவதால் அவருடைய நோன்பின் நன்மைகள் குறைந்து விடுகின்றன; அல்லது முற்றிலும் அழிந்து விடுகின்றன.
5) மார்க்கச் சட்டதிட்டங்கள் பழிக்கப்படுகின்றன. உதாரணமாக, பெண்கள் பர்தா அணிவதையும் ஆண்கள் பலதார மணம் புரிவதையும் கேவலமாகப் பேசப்படுகின்றன.
வரலாற்றுக்கு ஏற்படும் ஆபத்துகள்
1) இஸ்லாமிய வரலாறு சிதைக்கப்பட்டு உண்மைகள் மறுக்கப்படுகின்றன. முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் மறைக்கப்படுகின்றன.2) வரலாற்று உண்மைகள் மாற்றி காண்பிக்கப்படுகின்றன. உதாரணமாக, அநீதி இழைத்தவர்களை அநீதி இழைக்கப்பட்டவர்களாகவும் யூதர்களையும் கிறித்தவர்களையும் நேர்மையானவர்களாகவும் நீதியாளர்களாகவும் காண்பிக்கப்படுகின்றது. முஸ்லிம்களை நேர்மையற்றவர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றது.
3) இஸ்லாமிய வீரர்கள் குறித்து எடுக்கப்படும் தொடர்களில் அவர்களுடைய உண்மை வரலாறு மறைக்கப்பட்டு பொய்கள் வரலாறுகளாக காண்பிக்கப்படுகின்றன. பாவிகளும் தீயவர்களும் அவர்களுடைய பெயர்களில் தோன்றுகிறார்கள். மேலும் அவற்றில் காதல் மற்றும் காமக் காட்சிகள் இணைக்கப்படுகின்றன.
4) காஃபிர்களை பெரிய வீரர்களாகவும் பெரும் போர்க் கருவிகள் உடையவர்களாகவும் காண்பிக்கப்பட்டு முஸ்லிம்களின் உள்ளங்களில் கோழைத்தனம் புகுத்தப்படுகிறது.
மன ரீதியாக ஏற்படும் ஆபத்துகள்
1) வன்முறைகள், சண்டைகள், கொடூரங்கள் நிறைந்த காட்சிகளைப் பார்ப்பதால் முரட்டுக் குணம் ஏற்படுகிறது; சண்டையிடும் பண்பு வளர்கிறது.
2) பேய், பிசாசு, ஆவி படங்களால் மனதில் திகில் ஏற்பட்டு தூக்கத்தில்கூட பயந்து திடுக்கிடும் நிலைமை ஏற்படுகிறது.3) பிள்ளைகளின் எதார்த்த நிலைமைகள் பாழ்படுத்தப்படுகின்றன. உண்மைக்குப் புறம்பான காட்சிகள் காட்டப்படுவதால் அவற்றின் தாக்கங்கள் பிள்ளைகளிடம் ஏற்படுகின்றன. குறிப்பாக, கார்ட்டூன் படங்களால் இத்தீமைகள் பிள்ளைகளின் நிஜ வாழ்க்கையில் நிகழ்கின்றன.
உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் ஆபத்துகள்
1) கண் பார்வை குன்றி விடுகிறது. பார்வை அல்லாஹ்வின் அருளாகும். அதைப் பற்றியும் நாளை மறுமையில் அவன் விசாரணை செய்வான்.
2) வன்முறை காட்சிகளைப் பார்ப்பதால் மன அழுத்தங்களும் நரம்புத் தளர்ச்சியும் இரத்தக் கொதிப்பும் மாரடைப்பும் அதிகமாகின்றன. பார்ப்பவர்களும் அதுபோன்ற செயல்களைத் தங்களது வாழ்வில் செயல்படுத்துகின்றனர்.
3) நீண்ட நேரம் இரவில் விழித்திருப்பதால் உடல் ஆரோக்கியம் கெடுகிறது.
4) சூப்பர்மேனைப் போன்ற கதாபாத்திரங்கள் அமைந்த படங்களைப் பார்த்து விட்டு அவற்றில் காட்டப்படும் சாகசங்களை நிஜ வாழ்க்கையில் செய்ய முயற்சிக்கின்ற பிள்ளைகளின் உடலுக்கு பெரிய ஆபத்துகள் விளைகின்றன. இதைப்போலவே ரெஸ்லிங் என்னும் மல்யுத்தத்தைப் பார்த்து அவர்களைப் போல் நடிக்க நினைப்பவர்களுக்கும் பல கேடுகள் நிகழ்கின்றன.
பொருளாதாரத்திற்கு ஏற்படும் ஆபத்துகள்
1) இதற்காக தொலைக்காட்சிகள் வாங்குவது, அவற்றைப் புதிது புதிதாக மாற்றிக் கொண்டு இருப்பது, கேசட்டுகள், சீடிகள், டீவிடிகள் வாங்குவது, அவற்றை வைப்பதற்கான அலமாரிகள் வாங்குவது, அவை பழுதாகிவிட்டால் சீர்படுத்துவதற்கு செலவழிப்பது ஆகியவற்றால் செல்வம் விரயமாகிறது.
2) தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைக் கண்டு, தேவையற்ற ஆடம்பரப் பொருட்களையும் அலங்காரங்களையும் வாங்கிச் சேகரிக்க முயல்கிறார்கள். மேலும், உலகப் பொருட்களின் மீது மோகம் உண்டாகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!