குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை!🛐

 


குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை!🛐

அல்லாஹ்வின் திருப்பெயரால் ..

(இன்ஷாஅல்லாஹ் ஒவ்வொரு தலைப்பிலும் மண்ணரைப் பற்றி கட்டுரை பதியப்படும்.)


மண்ணறை வாழ்க்கை உண்மையானது


மண்ணறை வாழ்க்கை என்பது கிடையாது என்று சிலர் நினைக்கிறார்கள். மண்ணறை வாழ்க்கை உண்டு என்று இறை வனும், இறைத்தூதர் (ஸல்) அவர்களும் உறுதிபடுத்தியுள்ளார்கள்.


ஃபிர் அவ்னின் ஆட்களை தீய வேதனை சூழ்ந்து கொண்டது. காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள். அந்த நேரம் வரும் போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்)


அல்குர்ஆன் (40:45)


ஃபிர் அவ்னின் கூட்டத்தினர் தினமும் காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் காட்டப்படுகிறார்கள் என்பது மறுமையில் வழங்கப்படும் தண்டனைக்கு முன் வேறொரு தண்டனை உள்ளது என்பதை நிரூபிக்கிறது. ஏனென்றால் இவ்வசனத்தில் (40:46) யுக முடிவு நாளில் இவர்களை கடும் தண்டனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறப்படுகிறது. இது தான் கப்ரின் வேதனை என்று நபி மொழிகள் கூறுகின்றன.


மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக் கொண்டிருந்த போது) "மண்ணறைவாசிகள் மண்ணறையில் வேதனை செய்யப்படுகிறார்கள்" என்று கூறினர். அவர்கள் இருவரும் கூறியதை நான் நம்ப மறுத் தேன். அவர்கள் கூறியதை நம்புவது எனக்கு சரியாகப்பட வில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! இரு மூதாட்டிகள் (என்னிடம் வந்து இப்படி இப்படி சொன்னார்கள்") என்று அவர்களிடம் தெரிவித்தேன்.


 அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இருவரும் உண்மையே சொன்னார்கள். (மண்ணறையிலிருக்கும் பாவிகள்) கடுமை யாக வேதனை செய்யப்படுகிறார்கள். அந்த வேதனை(யால் அவதியுறும் அவர்களின் அலறல்)களை எல்லா மிருகங் களும் செவியேற்கின்றன" என்று சொன்னார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை.


அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


நூல்:புகாரி (6366)


மறுமையை நினைவூட்டும் மண்ணறை


மண்ணறைகள் இறையச்சத்தையும், மறுமை வாழ்வையும் நினை வூட்டக்கூடியவை என்பதால் மண்ணறைகளுக்குச் சென்று பார்த்து வருமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அடக்கத் தலங்களை சந்தியுங்கள். ஏனெனில் அவை மரணத்தை நினைவூட்டும்!


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல் : முஸ்லிம் (1777)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகிறது.


அறிவிப்பவர்: புரைதா (ரலி)


நூல் : திர்மிதி (974)


ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் உரையாற்றும்போது, "அடக்கஸ்தலத்தில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றி கூறினார்கள். அவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) பதறிவிட்டார்கள்.


அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)


நூல்: புகாரி (1373)பிரதிபலன் கிடைக்கும் இடம்


உலகில் நாம் செய்கின்ற நன்மைகளுக்கு முழுமையான பரிசும் தீமைகளுக்கு முழுமையான தண்டனையும் மறுமையில்தான் கிடைக்கவிருக்கிறது. மண்ணறை, மறுமை வாழ்வின் முதல் நிலை என்பதால் நல்லவர்களுக்கான பரிசும், தீயவர்களுக்கான தண்டனையும் இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது.


இறந்தவர்கள் தாங்கள் செய்த செயல்களுக்கான கூலியை மண்ணறை வாழ்வில் பெற்றுக் கொண்டிருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறந்தோரை ஏசாதீர்தகள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின்பால் சென்று சேர்ந்து விட்டார்கள்.


அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


நூல் : புகாரி (1393)


மண்ணறையின் நிலையே மறுமையின் நிலை


மண்ணறை வாழ்க்கை நல்லதாக அமைந்து விட்டால் மறுமை வாழ்க்கையும் நன்றாகவே அமைந்து விடும். ஆனால் மண்ணறை வாழ்க்கை சோகத்திற்குரியதாகவும், வேதனைக்குரியதாகவும் அமைந்து விட்டால் மறுமை வாழ்க்கை அதை விட வேதனைக்குரிய தாக அமைந்து விடும். எனவே சந்தோஷமான மண்ணறை வாழ்வைப் பெறுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.


உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்கு அருகில் நின்றால் தாடி நனைகின்ற அளவு அழுவார்கள். "சொர்க்கம், நரகத்தைப் பற்றி கூறப்படும் போது தாங்கள் அழுவதில்லை. ஆனால் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறீர்களே ஏன்?" என்று அவர்களிடத்தில் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள். மண்ணறைதான் மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும். இதில் ஒருவன் வென்று விட்டால் இதற்குப் பின் உள்ள நிலை இதை விட இலகுவானதாக இருக்கும். இதில் ஒருவன் வெற்றி பெறாவிட்டால் இதற்குப் பின் உள்ள நிலைமை இதைவிடக் கடுமையானதாக இருக்கும். நான் கண்ட காட்சிகளிலேயே மண்ணறைதான் மிகக் கோரமாக இருந்தது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ('எனவே தான் மண்ணறை யைப் பார்த்தால் அழுகிறேன்" என்று உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.)


அறிவிப்பவர்: ஹானிஃ (ரஹ்)


நூல் : திர்மிதி (2230)


எனவே உடம்பில் உயிர் இருக்கும் போதே நன்மைகளைச் செய்து கொள்ள வேண்டும். இறந்த பிறகு நமக்காக யார் அழுதாலும், கவலைப்பட்டாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை.


யூதப் பெண்ணொருத்தி இறந்ததற்காக அவளது குடும்பத்தார் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்பெண் இறந்ததற்காக இவர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள். அவளோ அடக்கக் குழி(கப்று)க்குள் வேதனை செய்யப்படுகிறாள்.


அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


நூல்: புகாரி (1289)


உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள்


முஸ்லிம் சமுதாயத்தில் பரவலாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்றிட 'இஸ்ராயில்' என்ற வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான். அவர்தான் உயிர்களைக் கைப்பற்றுகின்ற வானவர் என்று பரவலாக நம்புகின்றனர்.


ஆனால் 'இஸ்ராயீல்' என்ற பெயரில் வானவர் இருக்கிறார் என்று திருக்குர் ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை. இதற்குச் சான்றும் இல்லை. ஒரே ஒரு வானவர் தான் அத்தனை பேருடைய உயிரையும் கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்கும் எந்த சான்றும் இல்லை.


திருக்குர்ஆனை நாம் ஆய்வு செய்து பார்த்தால் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உயிரைக் கைப்பற்றுவதற்கு வானவர்கள் இருப்பதாகப் பின்வரும் வசனம் கூறுகிறது.


"உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்" என்று கூறுவீராக!


அல்குர்ஆன் (32:11)


உயிர்களைக் கைப்பற்ற வானவர்கள் வருவார்கள் என்று பன்மையாகத்தான் திருக்குர்ஆன் கூறுகிறது. இதிலிருந்து உயிர்களைக் கைப்பற்றுவதற்கு ஒருவர் இருக்க முடியாது என்று தெளிவாகிறது.


தமக்குத்தாமே தீங்கு இழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, "நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?" என்று கேட்பார்கள். "நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்" என்று அவர்கள் கூறு வார்கள். "அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத் செய்திருக்கக் கூடாதா?'' என்று கேட்பார்கள். அவர்கள் தங்குமிடம் நரகம். அது கெட்ட தங்குமிடமாகும்.


அல்குர்ஆன் (4:97)


தமக்குத்தாமே தீங்கு இழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும் போது, "நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை" என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள். அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அல்லாஹ் அறிந்த வன். "நரகத்தின் வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அதில் நிரந்தரமாகத் தங்குவீர்கள்" (என்று கூறப்படும்) பெருமை யடித்தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது.


அல்குர்ஆன் (16:28)அவர்களின் முகங்களிலும், பின்புறத்திலும் அடித்து வானவர்கள் அவர்களைக் கைப்பற்றும்போது எப்படி இருக்கும்?


அல்குர்ஆன் (47:27)


நம்முடைய தூதர்கள் அவர்களின் உயிர்களைக் கைப்பற்றுவார்கள் என்று வானவர்கள் குறித்து பின்வரும் வசனங்களிலும் காணலாம்.


"அல்லாஹ்வை விட்டுவிட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?" என்று நமது தூதர்கள் அவர்ககளைக் கைப்பற்ற அவர்களிடம் வரும்போது கேட்பார் கள். "அவர்கள் எங்களைவிட்டும் மறைந்து விட்டனர்" என அவர்கள் கூறுவார்கள்.


அல்குர்ஆன் (7:37)


அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்து பவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்பு கிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறைவைக்க மாட்டார்கள்.


அல்குர்ஆன் (6:61)


உயிர்களைக் கைப்பற்றுவதற்கு ஒரே ஒரு வானவர் இருக்கி றார் என்ற நம்பிக்கை தவறானது என்பதை மேலே கண்ட வசனங்கள் பறைசாற்றுகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவரது உயிரைக் கைப்பற்றுவதற்காக ஒரு வான்வரை அல்லாஹ் நியமித்திருக்கிறான். எப்போது கைப்பற்ற வேண்டும் என்ற உத்தரவு வருகிறதோ, அந்த உத்தரவுக்காக ஒவ்வொரு வினாடி நேரமும் அவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்பது தான் குர்ஆனிலிருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கவுரையிலிருந்தும் கிடைக்கின்ற முடிவாகும்.


ஒரு வானவர் உலகத்திலுள்ள அத்தனை பேருடைய உயிர்களையும் கைப்பற்றும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கின்றார் என்று சொல்லப்படுவதற்கு மார்க்கத்தில் எந்தச் சான்றும் இல்லை.

கருத்துகள்