சவால்களை நிதானத்துடன் அணுகி தீர்வு காண்போம்!
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
பொதுவாக நல்ல காரியங்கள் என உறுதியாக தெளிவான விடயங்களை தாமதமின்றி அவசரமாக நிறைவேற்றுவதை ஊக்குவிக்கும் இஸ்லாம், சிக்கல்கள், பிரச்சினைகள் மற்றும் குழப்ப நிலைகளின் போது பதற்றப் படுவதை தவிர்த்து பொறுமையையும், நிதானத்தையும் கடைப் பிடித்து சாணக்கியத்துடன் காரியமாற்றுவதை வலியுறுத்துகிறது.
அவசரம், பதற்றம், தீவிரம் என்பன ஷைத்தானின் தூண்டுதலால் உருவாகும் தீய பண்புகளாகும். இதன் காரணமாகவே மனிதன் பல்வேறு தவறுகளிலும், குற்றச் செயல்களிலும் வீழ்ந்து விடுவதோடு, பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை எட்ட முடியாமல் தவிக்கிறான். இன்று சிறு, சிறு சிக்கல்கள் பெரும் குழப்பமாக விஷ்வரூபம் எடுத்து பாரிய அழிவுகள் ஏற்பட இத்தகைய தீய குணங்களே காரணமாக அமைகின்றன என்றால் அது மிகையல்ல என கருதுகிறேன்.
وَيَدْعُ الْإِنسَانُ بِالشَّرِ دُعَاءَهُ بِالْخَيْرِ وَكَانَ الْإِنسَانُ عَجُولًا (سورة الإس)
மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 17:11)
எமக்கு பகிரங்கமாக பகைமையை வெளிப் படுத்துகின்றவர்கள் மற்றும் எம்முடன் அநீதமாக நடந்து கொள்கின்றவர்களுடன் கூட அவசரப் பட்டு அவர்கள் பாணியிலேயே முறை கேடாக நடந்து கொள்வதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. அவர்கள் முறைகேடாக நடந்து கொள்கின்ற போதும் அதனை பொருட்படுத்தாது நாம் இஸ்லாம் கூறும் ஒழுக்க விழுமியங்களுடன் நடந்து கொள்ளும் சந்தர்பத்தில் அவர்கள் தமது குற்றைத்தை உணர்ந்து திருந்தி எம்முடன் பண்பாக நடக்க வாய்ப்புள்ளது. இதற்கு நிறையவே முன்னுதாரனங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த கருத்தையே அல் குர்ஆன் பின்வருமாறு தெளிவு படுத்துகிறது.
ادۡفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّيٌ كَأَنَّيٌ وَ فصلت - الآية 34)
நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். (அல் குர்ஆன் 41:34)
وَمَا يُلَقَّاهَا إِلَّا الَّذِينَ صَبَرُوا وَمَا يُلَقَّاهَا إِلَّا ذُو حَظٍّ عَظِيمٍ
பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள். (அல் குர்ஆன் 41:35)
அதே நேரத்தில் நமக்கெதிரான சவால்கள் வியாபித்து செல்லும் நிலை உணரப் பட்டால் இஸ்லாமிய வரையறைக்குள் நின்று நிதானமாக அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றி சிந்திப்பதும், முயற்சி செய்வதும் அவசியமாகும். பொதுவாக அரசியல் தலைவர்கள், ஊடகங்கள், உலமாக்கள் உட்பட அனைவரும் தமது வரையறைக்குள் நின்றே இதற்காக திட்டமிட முடியும். தீவிரப் பட்டு முடிவுகள் எடுப்பதனால் சாதகமான பலன்களை அடைந்து கொள்வது சிரமமாகி நிரந்தர சிக்கலில் சிக்கிக் கொள்ள வேண்டிவரும் என்ற உண்மையையும் புரிந்து கொண்டு செயலாற்றுவது அவசியமாகும்.
ருப் அல்புராரி அன் அலி ரஸ்யி அல்லாஹ் அன்ஹு கால்: "லா தக்கோனோவா அவுஸ்ஸுலாபோ மஸ்ஆயிஅப் புரூரோயாஸ் ஃபுர்மன் மன் வராஸம் பல்லாக் -- وأمورًا متماحلةً رُدْحًا". [الأدب المفرد (169/1) وصححه الشيخ الألباني.
"அவசர காரர்களாகவோ, வதந்திகளைப் பரப்பி விடுபவர்களாகவோ, தீமைகளுக்கு வித்திடுபவர்களாகவோ நீங்கள் இருக்காதீர்கள்; உங்களுக்குப் பின்னால் ஒரு காலம் வரும் அக்காலத்திலே பாரிய குழப்பங்கள் தோன்றும்" (ஏனெனில் அப்படியான சந்தர்பத்தில் இவ்வாறு நடந்து கொள்வது பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும்) என அலி (ரழி) அவர்கள் கூறினார்கள். (அல் அதபுல் முப்ரத்)
பதறிய காரியம் சிதறி விடும் என்று சொல்வது போல் எக்காரியத்திலும் நிதானமிழந்து, தீவிரப் பட்டு முடிவெடுக்க முற்படும் போது மென்மேலும் சிக்கல்கள் அதிகரிக்குமே தவிர, தீர்வை அடைந்து கொள்ள முடியாது. மேலும் ஒரு பிரச்சினைப் பற்றி கேள்வி பட்டவுடனேயே, அதனை உறுதி படுத்திக் கொள்ளாது உடனே அதனை பரப்பிவிடுவதும் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றி விடுவது போன்று பிரச்சினைகள் மேலும் உக்கிரம் அடைந்து வியாபித்து செல்ல வழி வகுத்துவிடும். இப்படிப் பட்டவர்களே பிரச்சினைகளுக்கு வித்திடுபவர்களாகவும், தூண்டுகோலாகவும் விளங்குகிறார்கள். இவர்கள் பற்றியே இறைத் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
"மனிதர்களில் சிலர் நலவுக்கு திறவு கோலாகவும், தீமைகளுக்கு தடையாகவும் உள்ளனர், வேறு சிலர் தீமைகளுக்கு திறவு கோலாகவும் நலவுக்கு தடையாகவும் உள்ளனர், அல்லாஹ் எவரின் கரத்தினால் நலவின் வாயில்களை திறந்து விடுகிறானோ, அவருக்கு சுவசோபனம் உண்டாகட்டும், மேலும் எவன் மூலம் தீமைகளின் வாயில்கள் திறக்கப் படுகிறதோ அவன் மீது நாசம் உண்டாகட்டும்" என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு), (இப்னு மாஜாஹ்).
அநேக சந்தர்பங்களில் சிக்கல்கள், பிரச்சினைகள், அநியாயங்கள் நடந்தேறுவதற்கான காரணியை ஆராய்ந்து பார்த்தால் பிழையான எண்ணங்கள் மற்றும் எந்த விதத்திலும் உறுதி படுத்தப் படாத தகவல்கள் மூலம் உணர்ச்சி வசப் பட்டு அவசர முடிவு எட்டப் பட்டத்தின் விளைவாக இருப்பதை அவதானிக்கலாம். இதனால் தான் அல் குர்ஆன் பின்வருமாறு கட்டளையிடுகிறது:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبَ بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ
نَادِمِينَ (سورة الحجرات (6)
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (அல் குர்ஆன் 49:6) படுபவர்களாக
குழப்பங்களுக்கு தம்மைத் தாமே ஆளாக்கிக் கொள்வது ஆரோக்கியமானதல்ல. அது நிம்மதியற்ற வாழ்வுக்கு இட்டுச் செல்லும். கடமைகளை முறையாக செய்வதற்கும் தடையாக அமைந்துவிடும். எனவே குழப்பங்களின் போது முடிந்தளவு தூர விலகிச் செல்வதும் அதற்கு தூண்டுகோலாக நாம் அமைந்து விடாமல் இருப்பதும் அவசியமாகும். இதனையே பின்வரும் செய்திகள் வலியுறுத்துகின்றன:
"குழப்பங்களில் இருந்து தூரமாக்கப் படுகிறவன் பாக்கியசாலியாவான்" என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் மடக்கி மடக்கி மூன்று விடுத்தம் கூறியதாக மிக்தாத் இப்னுல் அஸ்வத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அபூ தாவூத்)
'விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அப்போது அவற்றுக்கிடையே (மௌனமாக) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனைவிடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் நடப்பவனை விடவும், அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடவும் சிறந்தவன் ஆவான். அதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறவரை அவை அழிக்க முற்படும். அப்போது ஒரு புகலிடத்தையோ, காப்பிடத்தையோ பெறுகிறவர் அதன் வாயிலாகத் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (அறிவிப்பவர்: அபூ ஹுரைராஹ் (ரலி) நூல்: புகாரி)
மேற்குறிப்பிடப் பட்டுள்ள செய்தி அவசியமின்றி பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்க்க வலியுறுத்துவதோடு, தற்காப்புக்கான சரியான இடத்தை பெற்றிட முயற்சிப்பதையும் தூண்டுகிறது. எனவே
பிரச்சினைகளிருந்து எவ்வளவுதான் நாம் ஒதுங்கி சென்றாலும் நம்மை நோக்கி அது வரும் நிலை இருந்தால் அதிலிருந்து நாம் தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை திட்டமிட்டு பாதுகாப்பிற்கான சூழலை ஏற்படுத்திக் கொள்வதும் அவசியமாகும்.
நமது இருப்பிடங்களுக்குள் அத்துமீறி வன்முறை காரர்கள் குழப்பம் விளைவிக்க வாய்ப்புள்ள நிலையில் விசேடமாக தற்காப்பு வசதிகளை செய்து வைத்துக் கொள்வது மிக மிக அவசியமாகும். உதாரணமாக தற்பாதுகாப்புக்கு உடன் அழைக்க முடியுமான அதிகாரிகள், உறவினர்கள், நண்பர்கள் போன்றோருடனான தொடர்ப்பு வசதியை செய்து வைத்துக் கொள்ளல், மற்றும் முடியுமான வரையில் தனிமையில் இருப்பதை தவிர்த்து கொள்ளல், மேலும் வலிந்து வம்புக்கு இழுக்கும் சந்தர்ப்பங்களில் ஒதுங்கிச் செல்வது போன்றவற்றை குறிப்பிடலாம்.
எப்படியோ இவ்வுலக வாழ்வில் செல்வ செழிப்பு, பிணிகள், சிரமங்கள், துயரங்கள், வறுமை, குழப்பம். வன்முறை, கலகம், அச்சுறுத்தல். அடக்குமுறைகள், மலை, வெள்ளம், காற்று போன்ற இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட எந்நிலையை நாம் கடந்து செல்ல வேண்டி ஏற்பட்டாலும் அனைத்தும் இறைவன் ஏற்படுத்திய சோதனையே. அவனையன்றி அதனை நீக்க எவராலும் முடியாது. எனவே வாழ்வில் எமது தவறை உணர்ந்து, வருந்தி, திருந்தி இறைவனிடம் மன்னிப்பு வேண்டுவதோடு, அதிகமதிகம் நல்லறங்கள், இறை வழிப் பாடுகளில் ஈடுபடுவது அவசியமாகும். மேலும் இறைவனிடம் பச்சாதாபப் பட்டு இறைஞ்சுவதும் அவசியமாகும்.
"(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 6:17)
நன்றி :
A.J.M மக்தூம்
மொழிபெயர்ப்பாளரின் பெயர்:
முஹம்மத் அமீன்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!