வாழ்க்கையில் சோதனைகள் மற்றும் கஷ்ட்டங்கள் .

 



வாழ்க்கையில் சோதனைகள் மற்றும் கஷ்ட்டங்கள் .

அல்லாஹ்வின் திருப்பெயரால் ..

ஆக்கம் : மரியாதைக்குரிய உமர் ஷெரீப் காசிம் .


அல்லாஹ் கூறுகின்றான் :


يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ


பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)


يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا


பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)


يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا


பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)


கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் அச்சத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக,பொது வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வின் பயத்தை முன்னிறுத்தி தனது காரியங்களை அமைத்துக் கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக என்னுடைய உரையை ஆரம்பம் செய்கிறேன்.


அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாஅவனுடைய அடியார்களை இந்த உலக வாழ்க்கையில் சோதிக்கின்றான்.


அவர்களுடைய இறை நம்பிக்கையை தரம் பிரிப்பதற்காக, அவர்களுடைய இஸ்லாமிய மார்க்கப் பற்றை உறுதிப்படுத்துவதற்காக, தீயவர்களை நல்லவர்களில் இருந்து பிரித்து எடுப்பதற்காக, உண்மையாளர்கள் யார் பொய்யர்கள் யார் என்பதை தெளிவாக தனிமையாக்கி விடுவதற்காக இப்படிப்பட்ட சோதனைகளை அல்லாஹு தஆலா இந்த உலகத்தில் கொடுக்கின்றான்.


ஒரு இறை நம்பிக்கையாளர் தனக்கு சோதனை ஏற்படும் போது அந்த சோதனை எந்த வகையான சோதனையாக இருந்தாலும் சரி,அந்த சோதனை நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைத்தான் பார்த்து வருகின்றோம்.


முதலாவதாக,அவரிடத்தில் ஸப்ரு -தன்னை அடக்கக் கூடிய, சகித்துக் கொள்ள கூடிய, இந்த சோதனைகளால் அல்லாஹ்வுடைய சட்டங்களை மீறாமல்,தனக்கு அல்லாஹ்வுடைய கட்டளை என்ன என்பதை அறிந்து அதன்படி நடக்கக் கூடிய மனப்பக்குவத்தை அவர் கொண்டு வர வேண்டும்.


அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைத்தான் முதல் கட்டத்தில் ஸப்ரு என்று சொல்கிறார்கள்.


சோதனை ஏற்பட்ட அந்த நேரத்திலேயே அமைதி காப்பது. அல்லாஹ்விற்கு பிரியமில்லாத வார்த்தையை தன்னுடைய நாவிலிருந்து வெளிப்படுத்தாமல் இருப்பது.


அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு நிகழ்வினை அனஸ் இப்னு மாலிக் அறிவிக்கின்றார்கள்.


ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கப்ருக்கு அருகில் அழுதுகொண்டிருந்த ஒரு பெண்மணியை கடந்து செல்லும்போது அந்தப் பெண்மணியை பார்த்து சொன்னார்கள்:


«اتَّقِي اللَّهَ وَاصْبِرِي»


அல்லாஹ்வை பயந்து கொள். இன்னும் பொறுமையாக இரு என்று.


அந்தப் பெண்மணி நபியைப் பார்த்து தூர விலகிச் செல்லுங்கள். எனக்கு ஏற்பட்ட சோதனை உங்களுக்கு ஏற்படவில்லை.நான் இருக்கின்ற கஷ்டம் உங்களுக்கு தெரியாது என்பதாக சொல்லி விடுகின்றார்கள்.


ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அந்த பெண் யாரென்று அறியவில்லை.


நபியவர்கள் அந்த இடத்தில் இருந்து சென்ற பிறகு, அந்தப் பெண்ணிடத்தில் சொல்லப்பட்டது;உங்களுக்கு இப்போது அறிவுரை செய்தவர்கள் அல்லாஹ்வுடைய நபி என்பதாக.


உடனே அந்தப் பெண் பயந்தவர்களாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வீட்டிற்கு வருகிறார்கள். சொல்கிறார்கள்;அங்கே நான் எந்த காவலாளியும் பார்க்கவில்லை என்று.


பிறகு, அந்த பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் சொல்கின்றார்கள்; அல்லாஹ்வுடைய தூதரே!நான் தெரியாமல் பேசிவிட்டேன். நீங்கள் யார் என்று தெரியாமல் சொல்லிவிட்டேன் என்று.


அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் அந்த பெண்மணிக்கு அறிவுரை கூறினார்கள்.


«إِنَّمَا الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى»


உனக்கு அந்த முதல் திடுக்கம் ஏற்படும்போது, முதல் தாக்கம் ஏற்படும்போது, அந்த நேரத்தில் நீ அமைதியாக இருக்க வேண்டும். அது தான் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொறுமை.


அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 1283.


இன்று மக்கள் என்ன செய்கின்றார்கள்? சோதனை நேரத்தில் யார் யாரை எல்லாம் ஏச வேண்டுமோ எல்லோரையும் ஏசி விடுவார்கள். அல்லாஹ்விலிருந்து, விதியிலிருந்து, வானவர்களிலிருந்து சுற்றியுள்ளவர்களிலிருந்து எல்லோரையும் ஏசி முடித்த பிறகு, சரி விடு, விதிப்படி நடக்கட்டும் என்று சொல்வார்கள்.


இப்படி ஒரு வார்த்தை ஒரு முஃமினை அவனுடைய கண்ணியத்திலிருந்து வெளிப்படுத்தி விடுகின்றது.


ஒரு முஃமினுடைய இறை நம்பிக்கையை பாழாக்கிவிடுகின்றது. முதல் கட்டத்திலேயே அவர் பொறுமை காக்க வேண்டும். தன்னை அடக்கி பழக வேண்டும். இதைத்தான் ஸப்ரு என்று சொல்வார்கள்.


ஸப்ரு என்று சொன்னால் தன்னை அடக்குவது, தன் நாவை, நப்ஸை அடக்குவது, தன்னை கட்டுப்படுத்துவது.


இது, முதலாவதாக பேண வேண்டிய ஒன்று. யாருக்கு இந்த சோதனை ஏற்பட்டதோ முதலாவதாக அவர் தன்னை அடக்கி கொள்ள வேண்டும்.


அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா இப்படிப்பட்டவர்களுக்கு தான் நற்செய்தி கூறுகின்றான்.


وَبَشِّرِ الصَّابِرِينَ


பொறுமை காக்கக் கூடியவர்களுக்கு, தன்னை அடக்க கூடியவர்களுக்கு நபியே! நீங்கள் நற்செய்தி கூறுங்கள். (அல்குர்ஆன் 2 : 155)


அல்லாஹ்விடத்தில் இருந்து சோதனைகள் ஏற்படும் போது அந்த நேரத்தில் தன்னை அடக்குவது,தன்னை கட்டுப்படுத்துவது.


அல்லாஹ் என்ன சொல்லி இருக்கின்றான்? இது யாரிடத்தில் இருந்து வந்தது? எதன் காரணமாக வந்த சோதனை? நாம் அல்லாஹ்விற்காக பொறுமையாக இருப்போம் என்று தன்னை நிலைப்படுத்துவது.


இரண்டாவதாக,அதைத் தொடர்ந்து அல்லாஹ்வுடைய விதியை ஏற்றுக் கொள்வது, அல்லாஹ்வுடைய விதியை பொருந்திக் கொள்வது.


அல்லாஹ் எனக்கு எதை விதித்தாலும் அல்ஹம்துலில்லாஹ். தான் ஒரு பாவமான காரியங்களை செய்திருந்தால் உடனடியாக அதிலிருந்து மீளுவதற்கு, அதிலிருந்து அல்லாஹ்விடத்தில் தவ்பா செய்ய வேண்டும்.


அதைத்தவிர எத்தகைய செய்தியாக இருந்தாலும், உலக சம்பந்தப்பட்ட சோதனை துன்பம், துயரம், கஷ்டம், பிரச்சனைகள் எது ஏற்பட்டாலும் சரி,உடனடியாக அல்லாஹ்வின் விதிப்படி நடந்தது. அல்லாஹ்வுடைய நாட்டப்படி நடந்தது என்று அல்லாஹ்விற்கு முன்னால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லாஹ்வுடைய விதியைப் பொருந்தி கொள்ளக்கூடிய நிலைக்கு இரண்டாவதாக ஒரு முஃமின் வந்தாக வேண்டும்.


இது மிக முக்கியமான ஒன்று. ஒரு சோதனை ஏற்படும் போது, ஒரு மன நெருக்கடி ஏற்படும்போது, நம்முடைய உள்ளமானது அப்படியே இறுகிவிடுகின்றது. அப்படியே நெருக்கடிக்கு ஆளாகி விடுகின்றது.


மூச்சு கூட விட முடியுமா? என்ற அளவிற்கு உள்ளத்தில் பெரிய நெருக்கடி.நாம் பார்ப்பது நமக்கு தெரியாது. நாம் கேட்பது நம் காதில் விழாது. பசி எடுக்கும்.ஆனால்,சாப்பிட முடியாது.


எல்லாம் இருக்கும், ஆனால் எதையும் அனுபவிக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு நம்முடைய மனம் ஆளாகிவிடுகின்றது.


ஒரு குறிப்பிட்ட ஒரு போரில் ஸஹாபாக்களுக்கு ஏற்பட்ட ஒரு துன்பத்தை அல்லாஹ் சொல்கின்றான்.


وَضَاقَتْ عَلَيْهِمْ أَنْفُسُهُمْ


அவர்களுடைய ஆன்மாக்களே அவர்களுடைய உள்ளத்தில் நெருக்கடிகளை உண்டாக்கிவிட்டது என்று. (அல்குர்ஆன் 9:118)


இதுதான் சோதனைகளில் சிக்குண்டவர்களின் நிலை பொதுவாக.


யா அல்லாஹ்! நீ விதித்தை நான் ஏற்றுக்கொண்டேன். நான் அதை ஒப்புக் கொண்டேன் என்ற ஒரு வார்த்தையை மனிதன் சொல்லும்போது, என்ற ஒரு கொள்கையில் உறுதியாய் மனதில் கொண்டு வரும் போது, நெருக்கடிக்கு ஆளான அவனுடைய உள்ளம், மூச்சைக் கூட வாங்க முடியாத அளவுக்கு நெருக்கடியில் இருந்த அவனுடைய உள்ளம்,வானம் பூமி அளவிற்கு, கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள அளவிற்கு அவனுடைய உள்ளம் அப்படியே விசாலமாகிவிடுகின்றது.


இதைத்தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையில் பார்க்கின்றோம்.


لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا


கவலைப் படாதே! அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான். (அல்குர்ஆன் 09:40)


இந்த சூழ்நிலையில் நம்மை வைத்தவன் அல்லாஹ். இந்த சூழ்நிலையில் இருந்து நம்மை பாதுகாப்பவனும் அல்லாஹ் தான். அல்லாஹ்வை தவிர இந்த சூழ்நிலையில் இருந்து நம்மை பாதுகாப்பதில் யாரும் இல்லை.


இப்படிப்பட்ட விசாலமான அல்லாஹ்வுடைய விதியைப் பொருந்தி அதற்கு அப்படியே சிரம் தாழ்த்தி விடுவது.


இந்த மனிதர்களுடைய உள்ளத்தை அல்லாஹ் விசாலமாக்கி விடுகின்றான். இவருடைய உள்ள ஒரு மலையைப் போல என்று மக்கள் சொல்வார்கள். எத்தகைய சோதனைகள் வந்தாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் உடையது என்று.


அப்படிப்பட்ட ஒரு தன்மை எப்படி ஏற்படும்?ஸப்ராக இருப்பதோடு ஸப்ருக்கு அடுத்த கட்டம், அல்ஹம்துலில்லாஹ் -அல்லாஹ் எனக்கு விதித்ததை நான் ஏற்றுக்கொண்டேன். அல்லாஹ்வுடைய கட்டளைக்கு முன்னால் அல்லாஹ்வுடைய வீதிக்கு முன்னால் நான் தலை சாய்த்து விட்டேன்.


இதிலிருந்து அல்லாஹ்விடம் நான் நன்மையை கேட்கின்றேன் என்ற நிலைக்கு அடுத்த கட்ட நிலையில் அடியான் வரவேண்டும்.


இதுதான் ஈமானுடைய அம்சம். உமர் ஃபாரூக் ரழியல்லாஹுஅன்ஹுஅறிவிக்கக் கூடிய ஹதீஸ்.


ஈமானை பற்றி ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் நபியிடத்தில் கேட்கின்றார்கள்; ஈமான் என்றால் என்ன? என்று.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;


«أَنْ تُؤْمِنَ بِاللهِ، وَمَلَائِكَتِهِ، وَكُتُبِهِ، وَرُسُلِهِ، وَالْيَوْمِ الْآخِرِ، وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ»


அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது, அவனுடைய வேதங்களை அவருடைய தூதர்களை அவனுடைய மலக்குகளை மறுமை நாளை மேலும் விதிக்கப்பட்டதை நீ நம்பிக்கை கொள்ள வேண்டும். அதில் உள்ள நன்மையையும் அதிலுள்ள தீமையையும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.


அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 8.


அல்லாஹ்வுடைய விதியில் எது எழுதப்பட்டதோ, அது தனக்கு நன்மையாக ஏற்பட்டாலும் சரி, சுக இன்பமாக ஏற்பட்டாலும் சரி, அது எதுவாக இருந்தாலும் சரி, அது விதிக்கப்பட்டது படிதான் நடந்தது என்று பொருந்திக் கொள்வது, ஏற்றுக்கொள்ளவது. இந்த ஒரு நிலைக்கு அடியான் வர வேண்டும்.


முதலாவது, ஸப்ரு. தன்னை அடக்கிக் கொள்வது, தன்னை ஒரு உறுதியான நிலைக்கு கொண்டு வருவது.


இரண்டாவது, அந்த அடியான் நடந்தைக்கொண்டு, யா அல்லாஹ்! உன்னுடைய விதியை நான் ஏற்றுக் கொண்டேன். உன்னுடைய விதியை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது. நீ எனக்கு விதித்ததை என்னால் மாற்ற முடியாது என்ற மன நிலைக்கு வருவது.


மூன்றாவது, அவருடைய நாவு. இந்த நாவை அல்லாஹ் விரும்பிய வார்த்தைகளில் அல்லாஹ் விரும்பிய கட்டளைகளில் தான் இந்த நாவை பயன்படுத்த வேண்டும். அந்த வார்த்தையைத்தான் நாவின் வழியாக சொல்லவேண்டும்.


உள்ளத்தில் ஈமான் இருக்கும் என்ற நிலைமையிலும்,அல்லாஹ் என்ன சொல்கின்றான்? அதே நேரத்தில் இந்த நாவிலும் அந்த வார்த்தையை வரவேண்டும். அல்லாஹ்வை திருப்திப் படுத்தக் கூடிய வார்த்தையாக அது இருக்க வேண்டும்.


கருத்துகள்