அல்லாஹ்விடம் குஷூவை (மனவொடுக்கம்) விடாப்பிடியாகக் கேளுங்கள்,

  



அல்லாஹ்விடம் குஷூவை (மனவொடுக்கம்) விடாப்பிடியாகக் கேளுங்கள், ஒருபோதும் கைவிடாதீர்கள்

பணிவுடன் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் (அஸ்ஸ வஜல்) திரும்புங்கள். உங்கள் தொழுகையை குஷூவுடன் (மனவொடுக்கம்)இறையச்சம் )பணிவு)  நிறைவேற்றும் ஆற்றலை உங்களுக்கு வழங்குமாறு அவனிடம் கெஞ்சிக் கேளுங்கள். அவன் உறுதியளித்தபடி, அவன் கண்டிப்பாகப் பதிலளிப்பான் என்ற உறுதியை உங்கள் இதயத்தில் கொள்ளுங்கள்: "என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால், (கூறுவீராக:) நிச்சயமாக நான் மிக அருகில் இருக்கிறேன். அழைப்பவர் என்னை அழைக்கும்போது அவரது அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். எனவே அவர்கள் எனக்கே பதிலளிக்கட்டும்; என்னையே நம்பட்டும். அதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்" (2:186).

நீங்கள் உங்கள் சொந்த மொழியிலேயே துஆ செய்யலாம். மாற்றாக, நமது அன்பிற்குரிய தூதர் ﷺ அவர்கள் கற்றுத்தந்த பின்வரும் பிரார்த்தனைகளை மனனம் செய்து, அவற்றின் மூலம் அல்லாஹ்விடம் கேட்கலாம்:


 "யா அல்லாஹ்! என் ஆத்மாவிற்கு அதன் தக்வாவை (இறையச்சத்தை) வழங்குவாயாக, அதைத் தூய்மைப்படுத்துவாயாக, தூய்மைப்படுத்துபவர்களில் நீயே சிறந்தவன். நீயே அதன் பாதுகாவலனும் தலைவனும் ஆவாய். யா அல்லாஹ்! பயனளிக்காத கல்வியிலிருந்தும், பணியாத இதயத்திலிருந்தும், திருப்தியடையாத ஆத்மாவிலிருந்தும், ஏற்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்." (முஸ்லிம்)


 "யா அல்லாஹ்! பயனளிக்காத தொழுகையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்." (அபூ தாவூத்)

 "எனது இறைவா! உனக்கு நன்றி செலுத்துபவனாகவும், உன்னை நினைவுகூருபவனாகவும், உனக்கு அஞ்சுபவனாகவும், உனக்குக் கீழ்ப்படிபவனாகவும், உன் முன்னால் பணிந்து நடப்பவனாகவும், உன்னையே அழுது அண்டி நிற்பவனாகவும், அடிக்கடி உன்னிடமே தவ்பா செய்து திரும்புபவனாகவும் என்னை ஆக்குவாயாக." (அபூ தாவூத்)

 "யா அல்லாஹ்! உன்னை நினைவுகூரவும், உனக்கு நன்றி செலுத்தவும், உன்னை மிகச் சிறந்த முறையில் வணங்கவும் எனக்கு உதவி செய்வாயாக." (அபூ தாவூத்)


ஒருபோதும் கைவிடாதீர்கள்!

மனிதர்களை நம்பிக்கை இழக்கச் செய்வது ஷைத்தானின் மிகவும் சக்திவாய்ந்த தந்திரங்களில் ஒன்றாகும். "இந்த குஷூ எனக்கு வராது, நான் முயற்சி செய்தும் என் கவனம் சிதறிக் கொண்டே இருக்கிறது" என்று நீங்கள் நினைக்கலாம். இந்த தந்திரத்திற்கு அடிபணிந்துவிடாதீர்கள், முயற்சியைத் தொடருங்கள். சில நாட்களில் உங்கள் குஷூ வலுவாக இருக்கும், சில நாட்களில் அது சுத்தமாக இல்லாதது போல் தோன்றும். இவை அனைத்தையும் தாண்டி, அதன் மீது தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருங்கள்.

 * "நான் 20 ஆண்டுகளாக தொழுகைக்காகப் போராடினேன், அதன் பிறகு அடுத்த 20 ஆண்டுகள் அதை அனுபவித்துத் தொழுதேன்." – தாபித் அல்-புனானி (ரஹ்)

 * "எனது நப்ஸ்  (மனம்) அழுதுகொண்டிருந்த போதே அதை அல்லாஹ்விடம் செல்ல வற்புறுத்தினேன். இறுதியில் அது சிரித்துக்கொண்டே அவனிடம் செல்லும் நிலையை நான் அடையும் வரை விடவில்லை." – அபூ ஸைத் (ரஹ்)

சமநிலையை நோக்கிய முயற்சி

சமநிலையை அடைவது எப்போதும் எளிதானது அல்ல. உங்களை நீங்களே கட்டாயப்படுத்துவதற்கும், அளவுக்கு அதிகமாகச் செய்வதற்கும் இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த முயலுங்கள். தரத்திலும் சரி, எண்ணிக்கையிலும் சரி, உங்கள் நப்ஸுடன் போராடித் தொழுங்கள். அதே சமயம், உங்களால் தாங்க முடியாத அளவுக்கு பாரத்தை ஏற்றிக்கொள்ளாதீர்கள். உதாரணமாக, ஒரு மார்க்க சொற்பொழிவைக் கேட்டுவிட்டு, உடனே தஹஜ்ஜுத் தொழ ஃபஜ்ருக்கு ஒரு மணி நேரம் முன்பே எழ முடிவு செய்யலாம். முதல் வாரம் இது சரியாக இருக்கலாம், ஆனால் இரண்டாவது வாரம் அது சுமையாகத் தெரிந்து, 10 நிமிடம் கூட எழ முடியாத நிலை ஏற்படலாம்.

ஒரேடியாக எல்லாவற்றிலும் மூழ்குவதை விட, படிப்படியாக உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். தொடர்ச்சி (consistency) என்பதே மிக முக்கியம். அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் பார்வையில் சிறந்த செயல்கள் யாதெனில், அவை குறைவாக இருந்தாலும் தொடர்ச்சியாகச் செய்யப்படுபவையே ஆகும்" (புகாரி).

எனவே, 'எல்லாம் அல்லது ஏதுமில்லை' (all-or-nothing) என்ற மனப்போக்கைக் கொள்ளாதீர்கள். 'ஒன்று நான் எல்லா சுன்னத் தொழுகைகளையும் தொழுவேன் அல்லது எதையுமே தொழமாட்டேன்' என்று உங்கள் உள்மனம் சொன்னால், எதையுமே தொழாமல் இருப்பதை விட சிலவற்றையாவது தொழுவது சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 "நிச்சயமாக இந்த இதயங்களுக்கு ஏற்ற இறக்கங்கள் உண்டு: அவை உற்சாகமாக இருக்கும்போது உபரியான (சுன்னத்) வணக்கங்களைச் செய்யுங்கள்; அவை சோர்வடையும் போது கடமையான (ஃபர்ளு) வணக்கங்களை மட்டுமாவது உறுதியாகப் பேணுங்கள்." – உமர் இப்னு அல்-கத்தாப் (ரலி)


Source: lifewithAllah.com


கருத்துகள்