RECENT POSTS

சோம்பேறிக்கு எப்போதுமே சோறு கிடைக்காது

 


சோம்பேறிக்கு எப்போதுமே சோறு கிடைக்காது




ஒரு ஊரில் ராமசாமி என்ற செல்வந்தர் இருந்தார். ஆனால் அவருக்கு மிகுந்த வயதாகி விட்டதால் எந்த நேரமும் வாழ்க்கை முடிந்து விடும் என்ற நிலை. ராமசாமிக்கு விளை நிலம் இருந்தது. அதற்குத் தகுந்தார் போல, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கத்தையும் கையில் வைத்து இருந்தார்.


ராமசாமிக்கு இரண்டு மகன்கள். இருவருமே வயது வந்த வாலிபர்கள். தமக்கிருக்கும் சொத்துக்களை அவர்கள் இருவருக்கும் சமமாக பிரித்துத் தர வேண்டும் என்று ராமசாமி தீர்மானித்தார். அதன்படி ஒரு நாள் தனது இரு மகன்களையும் அழைத்தார்.


மூத்த மகன் பெயர் தண்டபாணி. இளைய மகன் பெயர் கோவிந்தன்.


"எனது அருமைப் புதல்வர்களே, எனது சொத்துக்களை உங்கள் இருவருக்கும் சமமாக பிரித்துத் தர வேண்டும் எனத் தீர்மானித்து உள்ளேன். அதன்படி உங்கள் இருவருக்கும் நிலத்தையும், பணத்தையும் சரி சமமாக பகிர்ந்து தர இருக்கிறேன். உங்களுக்கு சம்மதம் தானே"என்றார் ராமசாமி.


"நிலமா? நிலத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? எனக்கு நிலம் வேண்டாம்; பணமாகவே கொடுத்து விடுங்கள்"என்றான் மூத்தவனான தண்டபாணி.


"தண்டபாணி நிலத்தைப் பற்றிக் கேவலமாகப் பேசாதே. நிலம் என்பது உணவு கொடுத்து நமது உயிரை வளர்க்கும் தாய் அல்லவா நிலம் இருந்தால் வாழ் நாள் முழுவதும் நாம் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட வேண்டி இருக்காது"என்று ராமசாமி கூறினார்.


அதற்கு தண்டபாணி, "தந்தையே நிலம் மட்டும் நமக்கு சோறு போட்டு விடுமா? அதில் இறங்கி வேலை செய்து உழ வேண்டும். அறுவடை செய்ய வேண்டும். இதையெல்லாம் யார் செய்வார்கள்? என்னால் அதெல்லாம் முடியாது"என்றான்.


இதனைக் கேட்ட ராமசாமி அதிர்ச்சி அடைந்தார். தண்டபாணியைப் பார்த்து, "என்ன பேசுகிறாய்? தண்டபாணி. நான் அதே நிலத்தில் இறங்கி உழைக்கா விட்டால் நீங்கள் இவ்வாறு வளர்ந்திருக்க முடியுமா? தவிர உழைப்பு இல்லாமல் மனிதனாலும் வாழ உலகத்தில் எந்த முடியாது. இந்த  பிரபஞ்சத்தில் உள்ள எல்லா மனிதனும் உழைத்துத் தான் உண்ண வேண்டும் என்பது கடவுளின் கோட்பாடு"என்றார்.


ஆனால் தண்டபாணியோ தந்தை சொல்லிய எந்த ஒரு வார்த்தையையும் காதில் வாங்கவில்லை மாறாக "பணம் இருந்தால் நான் அதனை வட்டிக்கு விட்டுக் கூட பிழைத்துக் கொள்வேன். உழைப்பின் மீது எல்லாம் இல்லை"என்றான். எனக்கு நம்பிக்கை


இவ்வாறாக ராமசாமி என்ன சொல்லியும் தண்டபாணி கேட்கவில்லை.


ராமசாமி தர்மசங்கடமான நிலைக்கு ஆளானார். தண்டபாணி சொல்கிறபடி நடப்பதாக இருந்தால் தான் வைத்திருக்கும் நிலத்திற்கு ஈடாக தம்மிடம் இருக்கின்ற பணம் முழுவதையும் தண்டபாணிக்கே கொடுக்க வேண்டி இருக்கும். அதனால் இளைய மகன் கோவிந்தனுக்கு வெறும் நிலத்தை மட்டும் தான் கொடுக்க வேண்டி இருக்கும்.


அவனும் தன்னால் உழைக்க முடியாது என்று பணத்தைக் கேட்டால் என்ன செய்வது?


இவ்வாறு யோசித்தபடியே ராமசாமி தனது இளைய மகன் கோவிந்தனை அழைத்தார். கோவிந்தனும் தந்தையின் ஆணைப்படி அவரது முன்னே வந்து நின்றான். ராமசாமி கோவிந்தனிடம் அவனது அண்ணன் கூறிய. விஷயத்தை எடுத்துச் சொல்லி வருந்தினார்.


தந்தை சொல்லிய வார்த்தைகளைக் கேட்ட கோவிந்தன், "அப்பா, தாங்கள் கவலைப் படாதீர்கள். தாங்கள் எனக்கு உழைக்கக் கற்றுத் தந்து உள்ளீர்கள். உங்களுடன் பல தடவை வயலில் இறங்கி பணி புரிந்து இருக்கிறேன். எனக்கு உழைப்பே மகிழ்ச்சி தரும். ஆகவே அண்ணனைப் போல நான் உழைக்க மாட்டேன் என்றெல்லாம் சத்தியமாக கூற மாட்டேன். பணத்தை முழுவதும் அண்ணனுக்கே கொடுத்து விடுங்கள். அதற்கு ஈடாக தாங்கள் தரும் நிலத்தை நான் சந்தோஷமாக ஏற்றுக்


கொள்கிறேன்"என்றான்.


கோவிந்தன் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில் ராமசாமிக்கு நிம்மதி ஆகி விட்டது. அவரது கவலையும் தீர்ந்தது.


தண்டபாணி விருப்பப்படியே அவனுக்கு ரொக்கப் பணம் முழுவதையும் அவனுக்குக் கொடுத்து விட்டான். என்றாலும் அதை அவர் முழு மனத் திருப்தியுடன் கொடுத்தார் என்று சொல்வதற்கு இல்லை.


மறுபுறம் தனது இளைய மகன் கோவிந்தனுக்கு முழு மனதுடனும், திருப்தியுடனும் நிலம் முழுவதையும் ராமசாமி எழுதிக் கொடுத்தார். பிறகு தனது இரு மகன்களுக்கும் பலவாறு புத்தி மதிகள் கூறி ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார். காலங்கள் உருண்டு ஓடியது. ராமசாமி வாழ்வும் முடிந்து விட்டது.


தண்டபாணி தனது தந்தை கொடுத்த பணத்தை மேலும், மேலும் வளர்த்துப் பெருக்காமல் செலவு செய்து கொண்டே இருந்தான்.


பணத்தை மூலதனமாகக் கொண்டு எந்தத் தொழிலைத் தொடங்குவதாக இருந்தாலும் கொஞ்சமாவது உழைத்தாக வேண்டுமே. ஆனால் தண்டபாணி உழைக்க கொஞ்சமும் தயார் இல்லை. ஆகவே அவன் கைப்பணம் கொஞ்சம் கொஞ்சமாக செலவாகிக் கரைந்து கொண்டே இருந்தது.


கோவிந்தனோ தனக்கு கிடைத்த நிலத்தில் கடுமையாக உழைத்துப் பாடுபட்டான். விவசாயம் செய்தான். ஒவ்வொரு ஆண்டும் தனது வருவாயை பெருக்கிக் கொண்டே இருந்தான். அதனால் செல்வச் செழிப்புடன் கோவிந்தனின் வாழ்க்கை சிறந்து விளங்கியது.


தண்டபாணியோ நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து கொண்டு இருந்தா. ஒரு நாள் கையில் ஒரு பைசாவும் இல்லை என்ற நிலைக்கு தண்டபாணி தள்ளப்பட்டான்.


தம்பியிடம் உதவி கூறவும் அவனுக்கு வெட்கமாக இருந்தது. அதனால் தண்டபாணி அந்த ஊரை விட்டே சென்றான்.


தண்டபாணியின் மனைவி, மக்கள் கூட அவனை மதிக்கவில்லை. கடைசியில் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து சீரழிந்து போனான் தண்டபாணி.


நீதி: உழைக்காமல் வம்பு பேசி காலம் கழிக்கும் அனைவரது வாழ்க்கையும் கடைசியில் தண்டபாணியின் வாழ்க்கையை போலத் தான் முடிவுக்கு வரும். சோம்பேறியாக இருந்தால் சோறு கூட இறுதியில் கிடைக்காது. உழைப்பே உயர்வு தரும் பெரும் சொத்து.

கருத்துகள்