வெள்ளி, ஜனவரி 12, 2018

ஒரு நண்பனை எவ்வாறு தேர்வு செய்வது ...?

ஒரு நண்பனை எவ்வாறு தேர்வு செய்வது ...?
முஹம்மது நபி (ஸல்.) அவர்கள் “ஒரு நண்பனை எவ்வாறு தேர்வு  செய்வது, நண்பனோடு எவ்வாறு பழகுவது.!”இது பற்றி என்ன சொல்லியிருக்கார்.ஹதீஸ் ஆதாரத்தோடு பதில் வேண்டும்.!

இதோ அழகான பதில் ...

இவ்வுலகில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு என்று நண்பர்களையும் நட்பு வட்டாரத்தையும் கொண்டிருப்பார்கள். நண்பர்கள் இல்லாத மக்கள் இல்லை என்ற சொல்லும் அளவிற்கு எல்லோருக்கும் அவரவர்கள் தகுதிக்கேற்ப நட்பு வட்டாரங்கள் அமைந்து இருக்கும்.
  ஒருத்தருடைய கண்ணியத்தையும் நடத்தையையும் அவரின் நண்பர்களைக் கொண்டே கணித்து விடும் அளவுக்கு நண்பர்கள் கூட்டம்.


  நண்பர்களில் சிலர் தன் நண்பனின் துயர் துடைப்பவராகவும்,கஷ்டமான காலங்களில் கை கொடுப்பவராகவும் இருப்பதையும் காணலாம். அதே வேளை சிலர், தங்களுடைய நண்பர்களின் தவறான செயல்களினால் தங்களின் பொன்னான நேரத்தையும் வாழ்வையும் சீரழித்துக் கொள்வதையும் காண முடிகிறது.

  இஸ்லாமும் நண்பர்கள் வைத்துக் கொள்வதை தடை செய்யாமல் ஊக்கப்படுத்துகிறது. நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ள ஆர்வமூட்டுகிறது. ஆனால் அந்த நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்றும் வரைமுறையை ஏற்படுத்தித் தந்துள்ளது.அதன் அடிப்படையில் நமது நண்பர்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

அழகிய நட்பு நம்மை படைத்த இறைவனின் பொருத்தத்தைப் பெற்றுத் தரக்கூடியதாக உள்ளதால் நாம் தேர்வு செய்யும் நண்பன் நாம் பின்பற்றும் இஸ்லாமியக் கொள்கை பிடிப்புள்ளவனா? என்பதை பார்க்க வேண்டும்.எல்லோரையும் நண்பர்களாக ஆக்கிக் கொள்வதை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிப்பதில்லை.

  அதேபோல் நண்பனை தேர்வு செய்வதற்கு முன்னால் நம்முடைய குணத்திற்கும் பழக்க வழக்கத்திற்கும் ஒத்துப் போகுமா? என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

தீயவர்களுடைய நட்பு இவ்வுலக வாழ்க்கையை மட்டுமின்றி மறுமை வாழ்வையும் நாசப்படுத்தி விடும் என்பதை உணர வேண்டும். அதே போல் நல்லவர்கள், நேர்மையானவர்கள் உடைய நட்பு இவ்வுலக வாழ்வை மட்டுமின்றி மறுமை வாழ்வையும் சந்தோசமாக அமைத்து விடும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நல்லவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுமாறு கூறினார்கள்.

முஸ்லிமாக இருக்கக் கூடியவர் ஒருத்தரை நண்பராக ஆக்கிக் கொள்ள வேண்டுமானால் அந்த தேர்வு அல்லாஹ்விற்காக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. இவ்வுலகில் கிடைக்கும் சொற்ப லாபங்களுக்காக நண்பர்களை தேர்வு செய்வதை விட்டும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

  நண்பர்கள் என்ற பெயரில் இன்றைய தினங்களில் நம் நண்பர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நம்மை அல்லாஹ்விற்காக நேசிக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்களா? என்பதை கவனிக்க வேண்டும். அல்லாஹ்விற்காக நேசித்தால், நண்பர்களை ஆக்கிக் கொண்டால் அந்த நண்பர்கள்  மூலமாக அல்லாஹ்வின் திருப்பொருத்தமும், நேசமும் கிடைக்கும் என்பதை அழகாக படம் பிடித்துக் காண்பிக்கிறது.

  மேலும் நல்ல நண்பர்கள் கிடைத்து விட்டால், யார் நல்லவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொண்டார்களோ அவர்கள் மறுமை நாளில் கவலைப்பட மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

நண்பர்களில் பெரும்பாலோர் நம்மிடம் இருக்கும் பொருளாதாரத்திற்காகவும், செல்வத்திற்காகவும், நம்முடைய அந்தஸ்திற்காகவும், பதவி பகட்டுக்காகவும் இருப்பதை காணலாம். செல்வம் இருக்கும் போது நட்பு கொண்டாடும் நண்பர்கள் வட்டாரம், கஷ்டங்கள் வரும் போது இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய் விடுவதை சர்வ சாதாரணமாக காணலாம்.

  நல்ல நண்பர்களையும் உலக ஆதாயத்திற்காக பழகும் நண்பர்களையும் அறிந்து கொள்வதற்கு நாம் வாழ்வில் சந்திக்கும் கஷ்டங்களும் சோதனைகளும் அளவுகோலாக அமைந்து விடுகிறது. புயல் காற்று வரும்போது தான் உறுதியான கட்டடம் எது? உறுதியற்ற கட்டடம் எது? என்பது விளங்குவதுபோல், சோதனைகள் நண்பர்களை அறிந்து கொள்ள உதவுகிறது.

 உண்மையான நட்பு என்பது, நம் உடலில் இருந்து ஆடை விலகும்போது, எப்படி கை விரைந்துச் சென்று ஆடையை பிடித்து மானத்தை காப்பாற்றுகிறதோ, அதேபோல் நண்பன் கஷ்டப்படும்போது அவனின் கஷ்டத்தை தீர்த்து வைப்பவனே உண்மையான நண்பன் ஆவான்.

இவ்வுலகில் ஒரு சிலரை நல்ல நண்பர்களாக உற்ற தோழர்களாக எண்ணியிருப்போம். ஆனால் அந்த உற்ற நண்பனே நம்மை ஏமாற்றியிருப்பான். நம்மை வெளிநாடு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றுவான். நம்பிக் கொடுத்த பொருளில் மோசடி செய்வான். சில நண்பர்கள் இருக்கின்றார்கள் அவர்கள், தங்களின் உயிர் நண்பன் என்று சொல்லக் கூடியவனின் மனைவியையே தடடிச் சென்ற நிகழ்வுகளும் நடந்துள்ளதை அறிய முடிகிறது. இப்படிப்பட்ட நட்பையும் இஸ்லாம் அங்கிகரிக்கவில்லை என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்போதுள்ள சூழலில் பள்ளி,கல்லூரிகள்,அலுவலகங்கள், அண்டைவீட்டார் என மாற்று மதத்தவர்கள் உள்ளதால் அவர்களுடன் நட்பு வைத்து கொள்வது தவறல்ல. ஆனால் அந்த நட்பு அவர்களுடைய கலாச்சாரத்தில் கலந்து கொண்டு விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்கள் பல மாற்று மதத்தவர்களிடம் நல்ல முறையில் பழகியுள்ளார்கள்.
அவர்களுடன் பழகுவது நம் மார்க்கத்தை எந்த விதத்திலும் பாதிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
நம் மார்க்கத்தை அவர்கள் அறிந்து கொள்ளவும், ஓரிறைக் கொள்கையை எத்தி வைக்கவும் அது ஏதுவாக அமையும்.
மாற்றுமத நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும்.

  நண்பர்கள் தவறு செய்யும்போது அந்த தவறுகளை திருத்துபவர்களாக நண்பர்கள் இருக்க வேண்டும். அவர்களுக்கு நன்மை நாடுபவர்களாக நண்பர்கள் இருக்க வேண்டும். அவ்வாறு தவறுகளை தடுக்கும்போது சிலர் எடுத்தெறிந்து பேசி விடுவார்கள். அந்த நேரங்களில் அவர்களை கோபித்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். ஆகவே நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவர்கள் இஸ்லாம் காட்டிய முறைப்படியும் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலும் அமைத்துக் கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கிருபை செய்வானாக!

📚📖ஆதாரங்கள்:

📓அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

  தோழர்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் அவர்களில் யார் தன்னுடைய தோழரிடத்தில் சிறந்தவராக இருக்கிறாரோ அவராவார் (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) திர்மிதி (1867)

📓உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று(குணத்தால்) ஒத்துப் போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன. (ஆயிஷா(ரலி) புகாரி 3336)

📓  நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்து விடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர். (அபூமூசா (ரலி) புகாரி 3336)

📓குற்றவாளியிடம், உங்களை நரகத்தில் சேர்த்தது எது? என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் (அல்குர்ஆன்: 74 : 40-45)

📓அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

  யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காக மறுக்கிறாரோ அவர் தான் ஈமானை புரணப்படுத்திக் கொண்டவர் (அபூஉமாமா(ரலி) அபூதாவூத் 4061)

📓 
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வேறொரு ஊரில், இருக்கும் தன் சகோதரனை சந்திப்பதற்காக ஒருவர் சென்றார். அவர் செல்லும் வழியில் ஒரு வானவரை அல்லாஹ் அவரிடத்தில் அனுப்பினான். அந்த வானவர் அவரிடத்தில் வந்தபோது நீங்கள் எங்கே செல்ல நினைக்கிறீர்கள்? எனக் கேட்டார். அதற்கு அவர் இந்த ஊரில் உள்ள எனது சகோதரனை சந்திக்கச் செல்கிறேன் என்று கூறினார். உங்களுக்கு சொந்தமான எதையாவது அவர் உங்களுக்கு தர வேண்டியுள்ளதா? என்று கேட்டார். அதற்கு இல்லை. கண்ணியமானவனும் சங்கையானவனுமான அல்லாஹ்விற்காக அவரை நேசிக்கிறேன் என்று கூறினார். அந்த வானவர் நீங்கள் யாருக்காக அவரை நேசித்தீர்களோ அவன் உங்களை நேசிக்கிறான் என்பதை உங்களிடம் (கூற வந்த) அல்லாஹ்வின் தூதராவேன் நான் எனக் கூறினார்.

(அபூஹூரைரா(ரலி) முஸ்லிம் 4656)

📓  அல்லாஹ் கூறுவதாக, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் விஷயத்தில் ஒருவருக் கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும், என் விஷயத்தில் அமர்பவர்களுக்கும் என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்பவர்களுக்கும் எனது பிரியம் உறுதியாகி விட்டது. (முஆத் (ரலி) அஹ்மத்(21114)

📓அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்றுக் கூறுவான் (அபூஹூரைரா(ரலி) முஸ்லிம் 4655)

📓அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ் விடத்தில் கிடைக்கும் அந்தஸ்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். சஹாபாக்கள், அவர்கள் யார்? என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த  பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை படித்துக் காட்டினார்கள்.

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அபூதாவூத் 3060)

📓அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனக்கு விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆக முடியாது.

(அனஸ் (ரலி) புகாரி 13)

📓அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

  ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான்.அவனுக்கு அநீதி இழைக்கவும் மாட்டான்,அவனை கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான்.எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாரோ அவரின்  மறுமை நாளின் துன்பத்தை அல்லாஹ் நீக்குகிறான். எவர் ஒருவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவரின் குறைகளை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்கிறான். (அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) புகாரி 2442

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••அல்லாஹ் அந்த சகோதரரருக்கு அருள் பாலிப்பானாக ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!