சனி, டிசம்பர் 13, 2014

ஜமாஅத் கூட்டமைப்பு [தொடர்ச்சி]

அல்லாஹ்வின் திருபெயரால் .........

சென்ற இதழில் ஜமாஅத் கூட்டமைப்பு தலைப்பில் இமாம் ஹூசைன் [ரலி] அவர்களைப் பார்த்தோம். இன்ஷாஅல்லாஹ் இப்பொழுது மற்றவைகளைப் பார்ப்போம்.........

''காடாக இருந்தாலும் மூவர் சேர்ந்திருந்தால் ஒருவர் தலைவராக[அமீராக] இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் , இம்மூவருக்கும் விமோட்சனமில்லை ' என நபிகளார் எச்சரித்துள்ளார்கள்.

'சுவனத்தின் மத்தியில் ஒருவருக்கு தனி மாளிகை வேண்டுமானால், அவர் ஜமாத்தை அணுகி வாழட்டும். தனி நபராக வாழ்ந்தால் அவர் ஷைத்தானாவார்' எனவும் பெருமானார் [ஸல்] அவர்கள் கண்டித்துள்ளார்கள்.


'தான் தோன்றித்தனமாக, மனம்போன போக்கில் ஒருவர் வாழ எண்ணி ஜமாஅத் கூட்டமைப்பை   விட்டும் அவர் ஒதுங்கினால் , அவர் நரகத்திலும் தனியாகக் கிடப்பார் ' என்றார்கள் பெருமானார் [ஸல்] அவர்கள். இதனால்தான் பாங்குச் சப்தம் கேட்கும் தூரத்திலாவது நமது குடியிருப்பு அமைய வேண்டும். நமக்கொரு துன்பம் என்றால் , நமது சமுதாயம் உதவும் தொலைவில் நாம் வாழ வேண்டுமென  பெரியார்கள் சொல்லிச் சென்றார்கள்.

ஜமாஅத்தை - கூட்டமைப்பை நாம் பலப்படுத்துவதன் மூலம் நமது நோக்கமெல்லாம் சத்திய இஸ்லாத்தை இகமெங்கும் பரப்புவதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் இயங்கும் பள்ளி நிர்வாகம் ஷரீ அத் வழிமுறைப்படி மக்களை வழிநடத்தி நெறிமுரைப்படுத்தினால் , இஸ்லாமிய சங்கம் உலகெங்கும் ஒலி எழுப்பும்.

ஆனால், இஸ்லாமிய கிராமங்களில் இன்றைய நிலை அதிக கவலைக்குரியதாகும். ஊர் தலைவர்களோ , குடும்ப விஷேங்களில் தலையை காட்டுவதை மட்டும் பிரதானமாக எண்ணுகின்றனர். ஊரில் நடக்கும் அவலங்கள் , அனாச்சாரங்கள், தில்லுமுல்லுகளை தட்டிக் கேட்க அஞ்சுகின்றனர். அல்லது அலட்சியப்படுத்துகின்றனர்.

அவர்கள் தைரியமாக நின்றால் ஒரு இஸ்லாமியக் குடியரசு போன்று கிராம நிர்வாகத்தை அவர்கள் நடத்த முடியும் . ஆனால்  தனிநபர் ஆராதனை , மார்க்கம் பற்றி கவலையின்மை, குறுகிய மனப்பான்மை, பதவி மீது கொண்டுள்ள வெறித்தன்மை இது போன்ற குணங்கள், இந்தத் தலைவர்களை ஆட்டிப்படைத்து திசைமாறச் செய்கின்றன.

இந்த நிலைமை முற்றிலும் மாறினால்தான், நாம் தீனுல் இஸ்லாத்தை வளர்க்க முடியும். ஜமாஅத் கூட்டமைப்பு மூலம் இதை தமது பிரதான கடமை என்பதை நிர்வாக தலைவர்கள் உணர்ந்தாக  வேண்டும். இந்த இலட்சியத்தை  மக்களை  கவர்ந்து,  மார்க்க அறிவையும், ஒற்றுமையையும் உண்டாக்கும் முயற்சியில் ஜமாஅத் தலைவர்கள்  ஊக்கமுடன் செயல்பட முன்வர வேண்டும்.

'தனிமரம் தோப்பாகாது' என்பது போல் தலைவர்கள் தனித்து நின்று இந்த இலட்சியப் பயணத்தின் கடைசிப்படியை அடையமுடியாது. ஊர் மக்களின் பலம் இதற்கு மிக மிக  தேவை.

இந்த உண்மைகளையெல்லாம் பின்வரும் வரிசையான பல திருவசனங்கள் நமக்கு பாடம் போதிக்கின்றன.

''உங்களில் ஒரு சமுதாயம்  நன்மையின்பால் அழைத்து நல்லதை ஏவி, தீயதைத் தடுப்பவர்களாக இருக்கட்டும்.''

''நிச்சயமாக அல்லாஹ் தனது பாதையில் இறுகிய கட்டிடங்கள் போன்று அணியாக நின்று  போராடுபவர்களை நேசிக்கின்றான்.''

''அல்லாஹ்வின் கயிற்றை [அல்லாஹ்வின் வேதம் திருக்குர் ஆன் ] நீங்கள் இறுகப்பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் பகை பாராட்டிக் கொண்டிருந்த சமயம்  அல்லாஹ் உங்களுக்கு அளித்த அருளை நினைவு கொள்ளுங்கள். உங்கள் மனதில் அவன் உள்ளன்பை உண்டாக்கினான். அவனுடைய அருளால் நீங்கள் சகோதரர்களாக மாறினீர்கள். ''

''காலத்தின் மீது ஆணையாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஈமான் கொண்டு, நல்லமல் புரிந்து, உண்மையை பரிமாறிக் கொண்டவர்கள், பொறுமையை பரிமாறிக் கொண்டவர்கள் தவிர.''

இத்தகைய திருவசனங்கள் ஜமாஅத் தலைவர்கள் மற்றும் ஊர் மக்களுடைய கடமையை விரிவாக விளக்குகின்றன.
தீனுல் இஸ்லாத்தை பரப்ப நம் சமுதாயம் தரணியில் நின்று பாடுபட வேண்டுமென வலியுறுத்தும் மேற்கூறிய முதல் வசனம்  , அந்த இலட்சியத்தில் வெற்றி கண்டிட மேல் மட்டத்தினரும், பொதுமக்களும் இணைந்து செயலாற்றியாக வேண்டுமென அதனை அடுத்த வசனம் படித்துச் சொல்கிறது.

இணைந்து செயலாற்றும் பொழுது சத்தியத்தையும், உண்மையையும்  ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள வேண்டும்.  நிகழுமானால், தட்டிக் கேட்கவும் வேண்டும். தட்டிக் கேட்கப்படுமானால், ஏற்று திருத்திக் கொள்ளவும் வேண்டும் என்பதை 4- ஆம் வசனம் எடுத்துக் காட்டுகின்றது.

இவற்றையெல்லாம் மனதிற்கொண்டு பள்ளிவாசல் ஜமாத்தை  வலுப்படுத்த, பள்ளிவாசல் நிர்வாகத்தை வலுப்படுத்த, நமது ஊர்ப் பெரியவர்கள் விரைந்தார்கள் என்றால், நீண்ட நாளாக பாராமுகப்படுத்தப்படும் ஜமாஅத் கூட்டமைப்பின் பிரதான நோக்கத்தில் விரைவில் வெற்றி கண்டிட முடியும் .

தலைப்பில் கண்டுள்ள ஹதீஸை சற்று உற்று நோக்குங்கள். ''பாராமுகமாக ஒரு ஆடு தனது ஆட்டு மந்தையிலிருந்து தனித்துவிட்டாலும், ஓநாய் அதை கவ்வி விடுகிறது.''

இந்த உதாரணத்தை நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நமக்கு விளக்கி இவ்வாறே ஒரு இஸ்லாமியன் - முஸ்லிம் ஊர் ஜமாஅத்திலிருந்து சற்று பாராமுகமாக இருந்தாலும், மனித ஓநாய்கள் , தீய சக்திகளும் அவனை தீய - அசத்திய வழியில் பலியாக்கி விடுவர் என்பது நமக்கு விளங்கச் செய்கின்றார்கள்.

பாராமுகத்துக்கு இந்த விளைவு என்றால், இஸ்லாமிய ஜமாஅத்தை  அலட்சியப்படுத்தினால் சொல்லவும் வேண்டுமா?  எனவே, இஸ்லாமிய ஜமாஅத்தை  மார்க்க வழியில் கொண்டு சென்று இஸ்லாமியப் பெருமையை நிலைநிறுத்த, நாம் அனைவரும் ஓரணியில் நின்று பாடுபடுவோமாக, அதற்கு அல்லாஹ்  துணை புரிவானாக.- ஆமீன் .
முற்றும் .....
அல்லாஹ் மிக்க அறிந்தவன் .
நன்றி நர்கிஸ் மற்றும் மௌலவி அல்ஹாஜ் A . முஹம்மது இஸ்மாயீல் பாஜில் பாகவீ
அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக.-ஆமீன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!