அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

புதன், நவம்பர் 23, 2016

வெட்கம் அனுமதியும் தடையும் தொடர் 2

சத்தியத்தைச் சொல்வதற்கு வெட்கம் கூடாது[வெட்கம் அனுமதியும் தடையும் தொடர் 2
இஸ்லாமிய மார்க்கத்தின் மிக முக்கியமான இந்த சத்தியப் பிரச்சாரக் கொள்கையை எவரிடமும் எடுத்துச் சொல்வதற்கு வெட்கம் தடையாக இருக்கவே கூடாது. அப்படி சத்தியப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடும்போது வெட்கம் தடையாக இருப்பின், அல்லது ஆள்பார்த்து ஆளுக்குத் தகுந்தமாதிரியெல்லாம் நமது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டால் நாம் வழிகெட்டு விடுவோம். எனவே யார் முகத்தையும் பாராமல் தயவுதாட்சண்யமின்றி ஒளிவுமறைவு இல்லாமல் காய்தல் உவத்தலின்றி சொல்லவேண்டிய செய்தியை இறைவனுக்குப் பயந்து சொல்லிவிட வேண்டியதுதான். இதுதான் சத்தியப் பிரச்சாரம் செய்கிற, சத்தியக் கொள்கையைக் கடைபிடிக்கிற ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய பண்பு. இதில் வெட்கப்படுவது நூறு சதம் தவறானதாகும்.

இப்படித்தான் நம்முடன் இருந்தவர்களில் எத்தனையோ பேர் வெட்கப்பட்டோ அல்லது தயவுதாட்சண்யத்திற்காகவோ அல்லது ஒருமாதிரியாக இருப்பதற்காகவோ சத்தியத்தை மறைத்ததினால் இன்று வழிகேட்டில் இருப்பதை நாம் கண்முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதேபோன்று நிர்வாகத்திலோ குடும்பத்திலோ ஒரு தவறு நடப்பதை வெட்கப்பட்டோ அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காகவோ தட்டிக்கேட்காமல் இருந்தால், நாளடைவில் அந்தத் தவறை நாமும்கூட செய்துவிடுவோம். அல்லது நமது மேற்பார்வையிலேயே அந்த தவறு நடைபெறுவதற்கு உறுதுணையாகிவிடுவதையும் நடைமுறை வாழ்க்கையில் பார்க்கத்தான் செய்கிறோம்.

எனவே சத்தியத்தைச் சொல்வதற்கு, உண்மையை உரைப்பதற்கு எவரும் வெட்கப்படவே கூடாது.

கொசுவையோ, அதை விட அற்பமானதையோ உதாரணமாகக்கூற அல்லாஹ் வெட்கப்படமாட்டான். நம்பிக்கை கொண்டோர் “இது தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை” என்பதை அறிந்து கொள்கின்றனர். ஆனால் (ஏக இறைவனை) மறுப்போர் “இதன் மூலம் அல்லாஹ் என்ன உவமையை நாடுகிறான்?” என்று கேட்கின்றனர். இ(வ்வுதாரணத்)தின் மூலம் அல்லாஹ் பலரை வழிகேட்டில் விடுகிறான். இதன் மூலம் பலரை நேர்வழியில் செலுத்துகிறான். இதன் மூலம் குற்றம் புரிவோரைத் தவிர (மற்றவர்களை) அவன் வழிகேட்டில் விடுவதில்லை.
(அல்குர்ஆன் 2:26)

மேற்சொன்ன வசனத்தில் இறைவன் கொசுவையோ அதைவிட அற்பமானதேயோ உதாரணம் கூறுவதற்கு வெட்கப்படமாட்டான் என்று சொல்வதிலிருந்தே இறைவன் சத்தியத்தை எடுத்துரைக்க தயவுதாட்சண்யம் பார்க்கமாட்டான் என்பதை விளங்கிக் கொள்ளமுடிகிறது. எனவே நாமும் சத்தியக் கருத்தை உண்மையைச் சொல்வதற்கு ஏன் பயப்படவேண்டும்? வெட்கப்படவேண்டும்? எனவே வெட்கப்படக்கூடாது. இறைவன் நபிக்குச் சொன்னதைப் போன்று ஏவப்பட்டதைப் போட்டு உடைத்துவிட வேண்டியதுதான்
(பார்க்க: அல்குர்ஆன் 15:94).

சில இயக்கத்தவர்களும் தனிமனித வழிபாட்டை ஆதரிப்பவர்களும் இப்படி தயவு தாட்சண்யம் என்கிற வெட்கத்தினால் தான் நன்மையை மட்டும் ஏவினால் போதும். தீமை தானாகவே ஓடி ஒளிந்துவிடும் என்று ஏகவசனம் பேசுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் வெட்கம்தான் தடையாக நிற்கிறது. அல்லது வேறெதாவது காரணமாக இருக்கும். எந்தக் காரணமாக இருந்தாலும் தவறு தவறுதான். இதை சரியென வாதிடுவது இஸ்லாத்திற்கு மாற்றமானதாகும்.

மேலும் நபியவர்களின் வாழ்விலும்கூட இதற்கு சான்றுகள் இருக்கின்றன.
(அபூதல்ஹா ரலி அவர்களின் துணைவியார்) உம்மு சுலைம் (ரலிரி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் மீது குளியல் கடமையாகுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(ஆம்! உறங்கி விழித்ததும் தன் மீது) அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளியல் அவள் மீது கடமைதான்)” என்று பதிலளித்தார்கள். உடனே நான் (வெட்கத்தினால்) எனது முகத்தை மூடிக் கொண்டு, “பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் வலக்கரம் மண்ணைக் கவ்வட்டும் (நன்றாகக் கேட்டாய், போ)! பிறகு எவ்வாறு குழந்தை தாயின் சாயலில் பிறக்கிறது?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி),
நூல்: புகாரி 130,282,3328, முஸ்லிம் 520,521,522,523,524

சில விஷயங்களில் பிறர் வருத்தம் பாராமல் வெட்கமில்லாமல் நடந்து கொள்வது பொதுவாக அந்தஸ்து, உயர்வு அல்லது ஏற்றத்தாழ்வு இப்படி ஏதேனும் ஒன்றை மனதிற்குள் வைத்துக்கொண்டு பிறர் மனம் நோகாமல் பழகவேண்டும் என்று சொல்லிக் கொண்டு, யானை தன்மீது மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டதைப் போல் சிலர் தனக்குத்தானே தர்ம சங்கடத்தை விலைகொடுத்து வாங்குவதைப் பார்க்கிறோம். இதுவெல்லாம் தேவையில்லாத வீண்சிரமத்தை தனக்காகவே ஏற்படுத்திக் கொள்வதாகும்.
எனவே பிற மனம் நோகுமே என்று எல்லா இடத்திலும் வெட்கப்பட்டுக் கொண்டு தேவையற்ற சிரமத்தை அனுபவிக்க வேண்டியதில்லை. யாராக இருந்தாலும் தெளிவாக விஷயத்தைச் சொல்லிவிட்டு இடத்தைக் காலிபண்ணிவிட வேண்டியதுதான். இல்லையெனில் நமது நேரமும் நமது உழைப்பும் நமது வாய்ப்புகளும் வீணாகி பாழாகிவிடும்.

இதை நன்றாக விளங்கிக் கொள்வதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்லலாம். நாம் முக்கியமான அவசரமான பிரயாண நேரத்திலோ அல்லது வேலையிலோ இருக்கிற போது நம்மால் மறுத்துப் பேச முடியாத சிலர் நம்மிடம் மிகமுக்கிய விஷயத்தை சுவாரஸ்யமாக விளக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த நேரம் நமக்கான மிகமுக்கிய நேரமாக இருக்கும். அது அவருக்குத் தெரியாது. அவர் எப்போதும் போலவே நம்மை அணுகுவார்.

இந்தநேரத்தில் நீங்கள் எப்படி அவரிடம் நமது தேவையை அல்லது அவசரத்தைச் சொல்வது என்று வெட்கப்படுவீர்களானால் அதனால் ஏற்படுகிற இழப்புக்கு நீங்கள்தான் காரணம். அவரைக் குறைகூற முடியாது. எனவே இதுபோன்ற சந்தர்பங்களில் உண்மை நிலையை சொல்லி அந்த அறுவை கேசிடமிருந்து நகர்ந்து கொள்வதே புத்திசாலித்தனம். இல்லையேல் தேவையற்ற கஷ்டங்களை அனுபவிப்பீர்கள். என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை. அதே நேரத்தில் பிறரது முக்கியத்தை உணர்ந்து இதுபோன்று பேசுவதையும் சம்பந்தப்பட்டவர்கள் மாற்றிக் கொள்வது மிகவும் நல்ல பண்பாகும்.

எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வெட்கப்படக் கூடாது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.
அபூ உஸ்மான் அல்ஜஅத் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (பஸராவிலுள்ள) பனூ ரிஃபாஆ பள்ளி வாசலில் (நாங்கள் இருந்துகொண்டிருந்த போது) அனஸ் (ரலி) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் இருக்கும் பகுதியைக் கடந்து சென்றால் அவர்களது இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுவது வழக்கம்.

நபி (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்து மணாளராக இருந்தபோது உம்முசுலைம் (ரலி) அவர்கள் என்னிடம், “அல் லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதாவது ஒன்றை நாம் அன்பளிப்பாக வழங்கினால் நன்றாயிருக்குமே!” என்று சொன்னார்கள். அதற்கு நான், “(அவ் வாறே) செய்யுங்கள்!” என்று அவர்களிடம் கூறினேன். ஆகவே, அவர்கள் பேரீச்சம்பழம், நெய், பாலாடைக்கட்டி ஆகியவற்றை எடுத்து “ஹைஸ்’ எனும் ஒருவகைப் பண்டத்தை ஒரு பாத்திரத்தில் தயாரித்தார்கள்.
அதை என்னிடம் கொடுத்து நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதை நான் எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களை நோக்கி நடந்(துசென்று கொடுத்)தேன். அப் போது அவர்கள் என்னிடம், “அதைக் கீழே வைக்குமாறு கூறிவிட்டு, சிலரது பெயரைக் குறிப்பிட்டு, அவர்களைத் தம(து மண விருந்து)க்காக அழைத்து வருமாறும், நான் சந்திக்கின்றவர்களையும் தமக்காக அழைத்து வருமாறும் என்னைப் பணித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்ட பணியைச் செய்து(முடித்து)விட்டு, நான் திரும்பிவந்தேன்.
அப்போது (நபியவர்களின்) அந்த இல்லம் மக்களால் நிரம்பியிருந்தது.
அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மிரு கைகளையும் அந்தப் பண்டத்தின் மீது வைத்து அல்லாஹ் நாடிய (பிரார்த்தனைச் சொற்கள் முதலிய)வற்றை மொழியக் கண்டேன். பிறகு அதனை உண்பதற்காக அங்கிருந்த மக்களைப் பத்துப் பத்துப்பேராக அழைக்கலானார்கள். அவர்களிடம், “அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! ஒவ்வொருவரும் அவரவர் (கைக்கு) அருகிலிருக்கும் பகுதியிலிருந்து உண்ணுங்கள்!” என்று கூறினார்கள்.
அவர்கள் அனைவரும் அதனைச் சாப்பிட்டுவிட்டு கலைந்து சென்றனர். அவர்களில் வெளியே சென்றுவிட்டவர்கள் போக ஒருசிலர் மட்டும் (அங்கேயே) பேசிக்கொண்டு இருந்து விட்டனர். (அவர்கள் எழுந்து செல்லாமல் இருப்பது குறித்து) நான் வருந்தலானேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் (வழக்கம் போல் தம் துணைவியரின்) அறைகளை நோக்கி (அவர்களுக்கு சலாம் கூறிப் பிரார்த்திப்பதற்காக)ப் புறப்பட்டுச் சென்றார்கள்.
அவர்களுக்குப் பின்னால் நானும் போனேன். “(எழுந்து செல்லாமல் பேசிக்கொண்டிருக்கும்) அவர்கள் போய்விட்டிருப்பார்கள்” என்று நான் கூறினேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் திரும்பிவந்து ஸைனப் (ரலி) அவர்களது அந்த இல்லத்திற்குள் சென்று திரையைத் தொங்கவிட்டார்கள். நான் அந்த அறையிலேயே இருந்து கொண்டிருந்தேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) பின்வரும் (33:53ஆவது) வசனத்தை ஓதினார்கள்:

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும்கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்று விடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்து விடாதீர்கள். நிச்சயமாக உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (சிறுவயதில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பத்தாண்டுகள் பணிவிடை செய்தேன்.
புகாரி 5163

இந்தச் செய்தி புகாரியிலும் முஸ்லிமிலும் (பார்க்க: 2796,2798,2802,2083) பல்வேறு அறிவிப்புகளில் பல வார்த்தைகளில் பதிவாகியுள்ளது.
முஸ்லிம் அறிவிப்பில் இன்னும் தெளிவாகவே உள்ளது. பலமுறை நபியவர்கள் பேசிக் கொண்டிருந்த ஸஹாபாக்களை எழுந்துபோகச் சொல்வதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு சொல்லாமலே செயலில் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள். பிறகு அல்லாஹ்வே இதுகுறித்து வசனம் இறக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இதில் நபியவர்கள் ஸஹாபாக்களிடம் சொல்வதற்கு வெட்கப்பட்டு ஏதேதோ செய்தார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்காக இன்னும் சில அறிவிப்புக்களைத் தருகிறோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஸைனப் பின்த் ஜஹ்ஷ்’ (ரலி)அவர்களை மணமுடித்துக் கொண்டபோது மக்களை அவர்கள் (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள். மக்கள் (விருந்து) உண்டுவிட்டு, பிறகு பேசிக்கொண்டே அமர்ந்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து போகத் தயாராயிருப்பது போல் (பல முறை) காட்டினார்கள். ஆனால், மக்கள் எழுந்திருக்கவில்லை.
அதைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் (ஒரேயடியாக) எழுந்து விட்டார்கள். அவர்கள் எழுந்து விடவே (அவர்களுடன்) மற்றவர்களும் எழுந்து விட்டனர்.
ஆனால், மூன்று பேர் மட்டும் அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களிடம் செல்லப் போனார்கள்.அப்போதும் அவர்கள் அமர்ந்து (கொண்டு பேசிக்) கொண்டேயிருந்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி,
நூல்: புகாரி 4791

…அப்போது நபி (ஸல்) அவர்கள் (“வலீமா’ விருந்துக்கான) உணவைத் தயாரித்து மக்களை அழைத்தார்கள். மக்கள் (சாப்பிட்டு விட்டு) பேசிக்கொண்டேஅமர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வெளியே வரவும் திரும்பச் செல்லவுமாக இருந்தார்கள். மக்களோ பேசிக் கொண்டே அமர்ந்திருந்தனர். அப்போது தான் அல்லாஹ்” இறைநம்பிக்கை கொண்டவர்களே!.. 33:53 வது வசனத்தை அருளினான்.
நூல் : புகாரி 4792

நபி (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்தபோது மக்களை (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள். மக்கள் (விருந்து) உண்டுவிட்டு, பிறகு அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் எழுந்துபோகத் தயாராவதைப் போன்று காட்டலானார்கள். ஆனால், மக்கள் எழுந்தபாடில்லை. அதைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் (ஒரேயடியாக) எழுந்து விட்டார்கள். அவர்கள் எழுந்துவிடவே (அவர்களுடன்) மற்றவர்களும் எழுந்து விட்டனர்… ஆனால், மூன்றுபேர் மட்டும் அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஸைனப் (ரலி) அவர்கள் இருந்த வீட்டுக்குள்) செல்லப்போனார்கள். அப்போதும் அவர்கள் (மூவரும்) அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். பிறகு அவர்கள் (மூவரும்) எழுந்து சென்றுவிட்டார்கள். நான் சென்று, அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள் என நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். மீண்டும் (வெளியே) வந்து பார்த்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் உள்ளே சென்றார்கள்…
நூல் : முஸ்லிம் 2801

…அவர்களில் ஒரு குழுவினர் மட்டும் நபி (ஸல்) அவர்கள் இருக்க, நீண்ட நேரம் பேசிக்கொண்டே (அமர்ந்து) இருந்தனர். அவர்களிடம் (எழுந்து செல்லுமாறு) ஏதேனும் கூற நபி (ஸல்) அவர்கள் வெட்கப்பட்டார்கள். எனவே, அவர்களை நபியவர்கள் அப்படியே வீட்டில் விட்டுவிட்டு (தாம் மட்டும் எழுந்து) வெளியே சென்றார்கள். அப்போது வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், “இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள்” என்று தொடங்கும் (33:53ஆவது) வசனத்தை அருளினான்.
நூல் : முஸ்லிம் 2804✋✊☝

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!