புதன், பிப்ரவரி 08, 2017

இறைவனின் அன்புக்கு அழகிய வழி[அண்டை வீட்டார்கள்]



அல்லாஹ்வும் அவன் தூதரும் விரும்பது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் அண்டைவீட்டாரிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளட்டும் என்றுநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அபீ குராத் (ரலி), நூல்கள் : ஷுஅபுல் ஈமான்-பைஹகீ (1502), ஹக்குல் ஜார், பக்கம் : 6.

நபிகளாரின் இறுதி அறிவுரை

நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது “நான் அண்டைவீட்டாரிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளவேண்டுமென வலியுறுத்துகிறேன்’ என்று அதிமாக கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி), நூல் : அல்முஃஜமுல் கபீர்-தப்ரானீ, பாகம் : 8, பக்கம் : 111)


யார் முஸ்லிம்?


அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்கும் முஸ்லிமாக இருப்பவன் அண்டைவீட்டாருக்கு நலம் நாடுபவனாக இருப்பான்.

“உன் பக்கத்தில் இருக்கும் அண்டைவீட்டாருக்கு நன்னமை செய் நீ முஸ்லிமாவாய்” என்று நபிகளார் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுýரைரா (ரலி),நூல் : இப்னுமாஜா (4207)

உதவுங்கள்

அண்டைவீட்டார் சிரமப்படும் போது அவர்களுக்கு பொருளாதார உதவிகள் செய்வது, நோயுற்றால் மருத்தவரிடம் கொண்டு செல்வது, நோயுற்ற நேரத்தில் உணவுகளை சமைத்துக் கொடுப்பது என்று எல்லாவிதமான உதவிகளையும் செய்யவேண்டும். நம் உறவினர்களுக்கு செய்வதைப் போன்று அவர்களுக்கும் நாம் செய்யவேண்டும்.இதை பின்வரும் நபிமொழியிலிருந்து விளங்கலாம்.


அண்டைவீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டைவீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயி‏ஷா (ரலி) நூல் : புகாரீ (6014)

குழம்பில் தண்ணீரை அதிகப்படுத்துங்கள்

அண்டைவீட்டார் இருக்கிறார்கள் என்ற எண்ணம் நம்மிடம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கட்டும். நாம் நல்ல பொருள்களை சமைக்கும் போது அவர்களுக்கும் வழங்கவேண்டும். குறைவாக நாம் குழம்பு வைத்தாலும் அதில் கொஞ்சம் தண்ணீரை சேர்த்து அவர்களுக்கும் வழங்கவேண்டும்.

அபூதர்ரே! நீ குழம்பு வைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து! உன் பக்கத்து வீட்டாரை (அதைக் கொடுத்து) கவனித்துக் கொள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி), நூல் : முஸ்லிம் (4758)

அற்பமானது என்று கொடுக்காமல் இருந்துவிடாதீர்!

நாம் அண்டைவீட்டாருக்கு வழங்கும் பொருள் தரம் உயர்ந்தாக இருக்கவேண்டும் என்பது நிபந்தனையில்லை, சாதாரண பொருளாக இருந்தாலும் அதை வழங்கவேண்டும். கொடுப்பவரும் வாங்குபவரும் அதை அற்பமாக கருதக்கூடாது.


“முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டைவீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரீ (2566)

அன்பளிப்புச் செய்வதில் முதலிடம்

ஒருவருக்கு மட்டுமே அன்பளிப்புச் செய்யமுடியும், குறைவான பொருட்களே இருக்கிறது என்றால் அண்டைவீட்டாரில் நம் வீட்டு வாசலுக்கு யார் பக்கத்தில் இருக்கிறாரோ அவருக்கு வழங்க வேண்டும்.


அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு” என்றார்கள்.

அறிவிப்பவர் : ஆயி‏ஷா (ரலி), நூல் : புகாரீ (2259)

சிறந்ததை தேர்வு செய்யுங்கள்

நம்மிடம் உள்ளதில் எது மட்டமானதோ அல்லது எதை சாப்பிட நாம் விரும்ப மாட்டோமோ அத்தகைய பொருள்களை அண்டைவீட்டாருக்கு வழங்காதீர்கள்! நல்ல தரமான பொருள்களை வழங்குங்கள். நீங்கள் சாப்பிடுவது சாதாரணமான பொருளாக இருந்தால் அதை வழங்குவதில் தவறில்லை. அதே நேரத்தில் மட்டமான பொருட்களாக தேர்வு செய்து வழங்கக்கூடாது.



நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2 : 267)


எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! “தமக்கு விரும்பியதை தன் அண்டைவீட்டாருக்கு அல்லது தன் சகோதரனுக்கு விரும்பாத வரை ஒரு அடியான் (உண்மையான) நம்பிக்கை கொண்டவனாக மாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (65???)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!