அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, பிப்ரவரி 22, 2014

மரணத்திலும் சஜ்தா ! மண்ணறையிலும் சஜ்தா !!


மரணத்திலும் சஜ்தா! மண்ணறையிலும் சஜ்தா!
அல்லாஹ்வின் திருபெயரால் ..........
இது கதை அல்ல ! நிஜம்
"அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில் ) பலவீனத்திலிருந்து குழந்தைத் தன்மையில் படைத்தான் . அதன் பின் பலவீனத்துக்கு பின்னர் பலத்தை உண்டாக்கினான் . பின்னர் பலத்துக்குப் பிறகு மீண்டும் பலவீனத்தையும் அத்துடன் முதுமையையும்  உண்டாக்கினான் . இவ்வாறு தான் நாடியதைப் படைக்கிறான். அவன் நன்கறிந்தவன்  ஆற்றல்மிக்கவன் ."
அல்குர் ஆன் :36:54


"யா அல்லாஹ் ! எனது ஆயுளின் மிகச்சிறந்த பகுதியாக அதன் இறுதியையும் , எனது செயல்களில் மிக அழகானதாக அதன் கடைசியையும் எனது நாட்களில் எல்லாம் மிக நல்ல நாளாக உன்னைச் சந்திக்கும் நாளையும் ஆக்கியருள்வாயாக ".
இது நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் அபூர்வமான பிரார்த்தனையாகும் .

மனிதனுக்கு பல பருவங்கள் உள்ளன . குழந்தை பருவம்- சிறுபருவம் -இளமை-வாலிபம்- வயோதிகம் -முதுமை இப்படிப் பட்ட பருவங்கள் ஒவ்வொன்றிலும் அவனுக்குள் வித்தியாசமான பல நிலைகள் ... குழந்தைத்தனமாகத் தான் நடந்து கொண்டதை எண்ணி இளமையில் சிரிக்கின்றான் . வாலிபத்தில் தான் செய்தவற்றை நினைத்து வயோதிகத்தில் வருந்துகின்றான். தள்ளாத முதுமை வந்து விட்டாலோ , மீண்டும் குழந்தையாகவே மாறி விடுகின்றான் .

எது நல்ல பருவம்?

"யாருக்கு நாம் நீண்ட ஆயுளைக் கொடுககின்றோமோ அவரைப் படைப்பின் நிலைகளில்  தலைகீழாக மாற்றிவிடுகின்றோம். (அல்குர் ஆன்      ) " என்ற இறைவசனம் இதை உறுதி செய்கின்றது .

இந்தப் பருவங்களில் எல்லாம் பொதுவாக நல்ல பருவம் என்று மக்கள் வாலிபத்தையே சொல்வார்கள். காரணம் எதையும் அனுபவிக்கத் தேவையான வலிமை  ... நோய்கள் இல்லாத, நினைத்ததை செய்து முடிப்பதற்குரிய முறுக்கேறிய  உடலமைப்பு ... தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் அளவுக்குச் செல்வத்தை அள்ளித் தரக்கூடிய உழைப்பு. இது போன்ற அனைத்தும் ஒருங்கே தரும் பருவம் என்பதால் அதுவே வாழ்க்கையின் மிகச் சிறந்த பருவம் என்று கருதப்படுவதில் தவறேதுமில்லை தான். ஆனால் வாலிபம் மட்டுமே சிறந்த பகுதியாக அமைந்து விட்டால் போதுமா என்றால் நிச்சயமாக இல்லை எனலாம் . முதுமையில் அனுபவிக்கும் சிறு நோய்க்கு முன்னாள் இளமையின் இன்பங்கள் எல்லாம் தூசியாகத்தான் தெரியும்.

கடைசி காலம்

பெருமானார் (ஸல்) அவர்களின் மேற்கண்ட பிரார்த்தனையை ஆழ்ந்து கவனித்துப் பாருங்கள். நம் வாழ்வின் பருவங்களில் எது மிகவும் நல்லதாக அமைய வேண்டும் ? இளமையா ? வாலிபமா ? இல்லை...நாம் வாழும் நாட்களிலேயே நமக்குக் கடைசியாக வரக்கூடிய நாட்கள்தான் அப்படி அமைய வேண்டும். முதுமை வரை நாம் வாழப் போகிறோமா ? என்பதை நாம் அறிய மாட்டோம் . அப்படி வாழ்ந்தால் அதுவே நம் வாழ்வின் மிக இனிமையானதாக இருக்க வேண்டும் என்பதைத் தான் இந்த துஆவின் மூலம் கேட்கிறார்கள் .

கடைசி அமல்

அதே போல் ... நமது அமல்களிலேயே மிகவும் சிறந்ததாக நமது கடைசி அமல் அமைய வேண்டும். அதுவே அழகிய முடிவு ஆகும். ஒரு நல்ல செயலில் ஈடுபட்டிருக்கும் நிலையில் மரணம் வருவது பெரும் பேறாகும். ஹஜ்ஜூடைய காலத்தில் அரபாப் பெரு வெயில் ... புனித ஹரம் ஷரீபுகளில் இதுபோன்ற உலகின் மிகச் சிறந்த இடங்களில் ... தொழுகையில் ... திக்ரில் ... தாவ்பில் ...சயீயில் ... இப்படிப்பட்ட நேரங்களில் மரணம் வருவது எவ்வளவு பாக்கியம்? நல்லடியார்களில் பலருக்கு இப்படிப்பட்ட மரணம் வாய்க்க தான் செய்கிறது . பயான் செய்யும்போது தொழுவைக்கும் போது வபாத்தாகிய பல ஆலிம்களின் வரலாறு தமிழகத்தில் உள்ளது.

ஆனால் இங்கே நாம் காணப்போவது மிகவும் வாய்ப்புக்குரியது. ஆம்! ரியாத் நகரில் ஒரு மூதாட்டி வயது 80 . எல்லாப் பெண்களையும் போல சாதாரண வணக்கங்களையும் வீட்டு வேலைகளையும் முடித்துவிட்டு , அக்கம் பக்கத்தைப் பற்றி  அளவளாவிக் கொண்டிருக்காமல் அவர் சதா திக்ர் , திலாவதை என்று இறை வணக்கத்திலேயே தம் நேரத்தை கழிப்பவராக இருந்து வந்தார் .

நாவைத் தவிர எதுவும்
இந்நிலையில் ஒரு நாள் அதிகாலை தஹஜ்ஜூத் தொழுது கொண்டிருக்கும் பொழுது திடீரென  தம் புதல்வரை அழைத்தார் . அந்த புதல்வரும் இறை வணக்கத்தில் இன்பம் காண்பவர்தான். "தாயார் ஏன் தன்னை அழைக்கின்றார் " என்று புரியாமல் வேகமாக ஓடிவந்து பார்த்தால் அம்மா சஜ்தாவுடைய நிலையில் இருக்கிறார் . தொழுது கொண்டிருக்கும் பொழுது பேசுவது கூடாதே என்று அருகில் வந்து நின்று கவனிக்கும் போது அம்மா பேசுவது நன்றாகக் கேட்டது. "அன்பு மகனே! அருகே வா! ஏன் உடம்பில் நாவைத் தவிர இப்போது எதுவுமே இயங்கவில்லை " என்று கூறுகிறார் .

அப்படியா! என்று அதிர்ச்சி அடைந்தவராக தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுகின்றார் . "மகனே எதுவும் வேண்டாம் தயவு செய்து என்னை வீட்டுக் கொண்டு செல்" என்று கெஞ்சிக் கொண்டிருந்த அன்னையைத் தன்னால் இயன்றவரை அருகிலிருந்து மருத்துவரிடம் காட்டி , அவர்கள் தங்களால் இயன்ற அனைத்து முயற்ச்சிகளும் செய்து உதட்டைப் பிதுக்கி விட்டபிறகு வேறு வழியின்றி வீட்டுக் கொண்டு வருகின்றார். அந்த மூதாட்டியின் உடம்பில் நாவைத் தவிர வேறு ஏதும் இயங்காத நிலை தொடர்கின்றது . வீட்டு வந்ததும் அவர் தம் மகனை அழைத்து "மகனே என்னை உளூ செய்வித்து முசல்லாவில் வைத்துவிடு , நான் ஏன் இறைவனை வணங்க வேண்டும் " என்று சொல்ல , மகன் அப்படியே செய்கின்றார்.

சஜ்தாவில் மரணம்

முசல்லாவில் சஜ்தாவுடைய நிலையிலேயே கிடக்கின்றார் . எழுந்திருக்கவோ உட்காரவோ முடியாத நிலை என்பதால் மகன் அருகிலிருந்து அம்மாவைக் கவனித்து கொண்டிருக்கின்றார் . நீண்ட நேரம் கழிந்து . "அம்மா அம்மா என்று அழைக்கின்றார் பதில் இல்லை . பக்கத்தில் வந்து உடலை அசைக்கின்றார் ஊகும்... உடலில் எதுவுமில்லை .. உயிரும் இல்லை.

மரணத்துக்குப் பிறகும் சஜ்தா

சஜ்தாவுடைய நிலையிலேயே அன்னையின் ரூஹ் பிரிந்திருக்கிறது என்று புரிந்து கொண்டவர் அடுத்து வேளைகளில் கவனம் செலுத்துகிறார். அக்கம் பக்கம் உற்றார் , உறவினர் எல்லோரும் கூடி , அடி கழுவ உடலை நீட்டி நிமிர்த்திப்படுக்க வைக்க முயர்ச்சிக்கின்றார்கள். எதுவும் முடியவில்லை . சஜ்தாவுடைய அதே நிலையிலே குளிப்பாட்டி , கபனிட்டு மண்ணறையிலும் கூட அதே நிலையில் வைக்கத்தான் முடிந்தது .

சுப்ஹானல்லாஹ் ! இப்படி ஒரு மவ்த்தா ? கப்ரில் கூட படுக்க வைக்க முடியாத அளவுக்கு உடல் சஜ்தா நிலையிலேயே விறைத்து போய் விட்டதை எண்ணி அரபு உலகமே திகைத்து நிற்கிறது . அல்லாஹ்வுடைய நாட்டத்திற்கு இது ஒன்றும் அசாத்தியமானதல்ல தானே!

இறைவா ! எண்களின் இறுதி முடிவை அழகானதாக்கி, உன்னை சந்திக்கும் நாளை எங்கள் நாட்களிலேயே மிக நல்ல நாளாக ஆக்கியருள்வாயாக!
மேற்கண்ட துஆவை மனம் செய்து , தினதோரும் அல்லாஹ்விடம் கேட்போமாக !
இதுபோன்ற நிறைய நல்ல சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது பெரிய பாக்கியம்! நம் வாழ்வில் இறுதி பகுதி ரொம்ப முக்கியம் என்பதை இந்த கட்டுரையின் மூலம் உணர்கிறோம் .
அல்லாஹ் மிக அறிந்தவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!