புதன், ஜனவரி 21, 2015

நடைமுறை வாழ்வில் மனிதநேயம்

அல்லாஹ்வின் திருபெயரால் ......
இஸ்லாமிய வெளிச்சத்தில் மனிதநேயம் 

மனிதன் என்பவன் சமுதாயத்தின் ஓர் அங்கமாகவே இருப்பதால், ஒருவரையொருவர் சார்ந்து வாழக்கூடிய சார்பு வாழ்வை மேற்கொள்கிறான் . அவனது சமூகப் பங்களிப்பு வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் அவசியமாகிறது . வாழ்வாதாரத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை பெறவும் , அதற்காகத் தீவிரமாக உழைக்கவும் முற்படுகிறான். தன் தேவைகளை மட்டுமின்றி , தன்னைச் சேர்ந்திருக்கும் அங்கத்தினரின் தேவைகளையும் பேண  வேண்டிய அவசியமும் அவனைச் சேர்க்கிறது. இத்தகைய சூழ்நிலை மாற்றங்களில் காரணமாக ஒவ்வொருவரின் பொருளாதார அமைப்பும் மாறுபடுகிறது. பொருளாதார அமைப்பில் சிலர், சிலரைவிட வலுவான நிலையில் இருக்கின்றபோது பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உருவாகின்றன. இவ்வேறுபாடுகள் பணம் கைமாற்றலில் , வியாபார அணுகு முறைகளில் மற்றும் நடைமுறை விஷயங்களில் பரிமாற்றங்களாக நிகழ்கின்றன.


அன்றாட நடைமுறை வாழ்வில் நிகழும் இத்தகைய அலுவல்களில் பணத்தொடர்புடைய விஷயங்களில் பிரச்சனைகள் ஏற்படும்போது , இயல்பு நிலையில் உள்ள மனிதனின் சுயசிந்தனைத்திரன் குறைந்து, பணம் பெறுவது மட்டுமே அவனுக்குப் பிரதானமாகப்படுகிறது . கொடுக்கக்கூடிய நிலையில் உள்ளவன், பெறக்கூடிய நிலையில் உள்ளவனின் இடர்களைச் சிந்திப்பதேயில்லை. அதுவும் இன்றைய உலகின் பொருளாதார அமைப்பில் வட்டி  என்பது முக்கிய பங்கு வகுக்கின்றது . வட்டியில்லாமல் பொருளியலே இல்லையென்கிற அளவிற்கு அதனுடைய ஆக்கிரமிப்பு எங்கும் நிறைந்திருக்கின்றது . சமூகத் தீமையான இவ்வட்டியின் கொடுமையால் எண்ணற்றக் குடும்பங்கள் அழிந்து போகின்றன. வாழ வழியின்றி மாய்ந்து போகின்றன. வட்டியின் பெயரால் நல்ல நிலையில் உள்ள பல குடும்பங்கள் தெருவிற்குக் கொண்டு வரப்பட்டு, அவமானப் படுத்தப்படும் மனித நேயமற்றச் செயல்கள் இன்று அன்றாட நிகழ்வுகளாகி விட்டன.

வட்டியில்லாதப் பொருளாதார அமைப்பை உருவாக்க முடியுமேயானால், நிச்சயமாக இத்தகைய அநியாயங்கள் நிகழாவண்ணம் தடுக்க முடியும். மனிதநேய அடிப்படையில் லாபநோக்கில்லா கடன் முறையை  அமலாக்க, இஸ்லாம் மட்டுமே வலியுறுத்துகிறது. வட்டியை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அல்லாஹ்  தன் திருமறையில் வட்டியைப் பற்றி பின்வருமாறு கூறுகிறான்.

''இறைநம்பிக்கை கொண்டவர்களே! பன்மடங்காகப் பெருகி வளரும் வட்டியை உண்ணாதீர்கள். இறைவனுக்கு அஞ்சுங்கள். நீங்கள் வெற்றி பெறக்கூடும்''
திருக்குர் ஆன்  [3..130]

''உங்களுக்கு வரவேண்டிய வட்டிப் பாக்கிகளை விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாவிடின் , இறைவனிடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் உங்களுக்கு எதிராகப்  போர் அறிவிக்கப்பட்டு விட்டதென்பதை அறிந்து கொள்ளுங்கள். ''       [திருக்குர் ஆன் 2..278]

இறைவனின் தூதர் முஹம்மது நபி  [ஸல்] அவர்களும் வட்டியைக் கடுமையாகச் சாட்டியுள்ளனர்.
அறிவிப்பாளர் .. இப்னு மஸ்ஊத் [ரலி]  ''நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் வட்டி  வாங்குபவர்கள் மீதும் , வட்டி கொடுப்பவர்கள் மீதும் , இவ்விருவருக்கும் சாட்சியாக இருப்பவர்கள் மீதும்,  வட்டிக் கணக்கு எழுதுபவர்கள் மீதும் சாபமிட்டார்கள்.'' [ஆதாரம் .. புகாரி ,முஸ்லிம்]

இஸ்லாம் ,தேவையுள்ளவர்களை மனிதநேய அடிப்படையில் அணுக முற்படுவதால்தான், அவர்களின் சுமையைக் குறைக்க வட்டியை ஹராமாக்கியுள்ளது. வட்டியில்லா அழகியக் கடன் அமலாக்கம் செய்யப்படுமேயானால்  சமூகக் கொடுமைகள், ஏற்றதாழ்வுகள் நிச்சயம் மறையக்கூடும் .

பொருளாதாரச் சமத்துவம் இயற்க்கை நியதிக்கு முரணானது,, சாத்தியமற்றது. ஆனால், செல்வம் நீதியின் அடிப்படையில் பங்கிடப்பட வேண்டும். இது இறையாணையாகும் .

''உங்களில் சிலருக்கு வேறு சிலரைவிட உயர்ந்த படித்தரங்களை அவன் வழங்கியிருக்கின்றான். அவன் உங்களுக்கு வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக! ''  திருக்குர் ஆன் [6..165]

ஆக, இறைவன் செல்வத்தைச் சோதனையாக அளித்து, அச்சோதனையில் மனிதனின் செயல் எப்படியிருக்கிறது என்பதை பதிவு  செய்கிறான்.

அழகிய கடன் எனபது, வட்டியில்லா கடன் என்பதை தெளிவுபடுத்திக் கொண்டோம். பொருளாதாரச் சமத்துவம் சாத்தியமற்றது என்பதால் நிச்சயம் கடன்படுதல் தவிர்க்க இயலாத ஓர்  அம்சமாயிருக்கிறது. அச்சூழ்நிலையில் கடன்  பெற்றவரிடம் எங்ஙனம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாமிய ஒளியில் ஆராய்வோம்..

''உங்களில் கடன்பட்டவர் வசதியற்றவராக இருந்தால் [அவருக்கு] வசதி ஏற்படும்வரை , நீங்கள் காத்திருங்கள். நீங்கள் உண்மையை அறிந்திருப்பின் [அசலையே அவர்களுக்கு]  நீங்கள் தர்மம் செய்துவிடுவது உங்களுக்கு இன்னும் சிறந்தது  . '' [2..280]

நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..
'மறுமை நாளில் துயரத்திலிருந்தும், கடினத்திலிருந்தும் , அல்லாஹ் தம்மைக் காப்பாற்ற வேண்டுமென்று விரும்புபவர், வசதியற்ற கடனாளிக்குத் தவணை கொடுக்கவும், அல்லது அவன் மீதுள்ள கடன் சுமையை நீக்கிவிடவும்.']முஸ்லிம்]

மேற்சொன்ன ஆதாரங்களிலிருந்து இஸ்லாம் கடன்ப்பட்டவர்களிடம் நலிந்தவர்களிடம் எத்தகைய ஒரு மகத்தான மனிதநேயப்  பண்பை வெளிப்படுத்த வலியுறுத்துகிறது என்பதை அறிய முடிகிறது.
இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும் ......
அடுத்த இதழில் இஸ்லாம் கூறும் வியாபாரம் அணுகுமுறைகளை பார்ப்போம்...
*************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!