செவ்வாய், பிப்ரவரி 10, 2015

அழிக்க வேண்டுமா மறுமை எண்ணத்தை ...?

அல்லாஹ்வின் திருபெயரால் ...

சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன் . மதங்கள் கூறும் மறுமைக் கொள்கை மீது அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. மறுமை எண்ணத்தையே  அழித்துவிட வேண்டும் என்று ஆவேசமாக வாதிட்டார். அதற்கான சில காரணங்களையும் அவர் முன்வைத்தார்.

யாகம் என்ற பெயரில் வேள்வி வளர்த்து, விலை உயர்ந்த பொருள்களைத் தீயில்  போட்டுச் சாம்பலாக்குகிறார்கள் .


மறுமை சிந்தனை அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு எதிரானது. மறுமை , வறுமையை  வளர்க்கிறது . மக்களை ரொட்டிக்காக அலைய விடுகிறது . இப்படிச் சொல்லிக் கொண்டே போன அந்த நண்பருக்கு , இஸ்லாம் கூறும் மறுமைக் கொள்கையைச் சுருக்கமாக விளக்கினேன். இந்த உலக வாழ்க்கை நிலையானதன்று. இறைவன் மட்டுமே அறிந்துள்ள ஒரு நாளில் இந்த உலகம் அழியும் . மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள். இவ்வுலகில் அவர்கள் செய்த செயல்கள் அனைத்திற்கும் இறைவனின் நீதிமன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும். நற்செயல்கள் செய்தவர்களுக்கு சொர்க்கமும், தீயவர்களுக்கு நரகமும் கிடைக்கும். யாருக்கு சொர்க்கம் கிடைக்கிறதோ, அவர்கள்தாம் உண்மையான வெற்றியாளர்கள்,, யார் எரிநரகில் தள்ளப்படுகிரார்களோ, அவர்கள்தாம் பெரும் இழப்புக்குரியவர்கள்.

இஸ்லாம் கூறும் இந்த மறுமைச் சிந்தனையால் சமூகத்தில் விளைந்த நன்மைகள் என்னென்ன தெரியுமா ? அந்த மறுமை எண்ணம்தான்-

இறையச்சத்தை விதைத்தது ! ஒழுக்கத்தைக் கட்டிக் காத்தது! சமத்துவத்தை பேணச் செய்தது ! சகோதரத்துவத்தைக் கடைப்பிடிக்கச் செய்தது! அறிவியல் கண்டுப்பிடிப்புகளுக்கு ஊக்கமளித்தது! அநீதிகளை அடித்து விரட்டியது ! வறுமையை ஒழித்துக் கட்டியது! ஆளுமைப் பண்புகளை மலர்ச் செய்தது! ஆதரவற்றோரை அரவணைக்கச் செய்தது!
இப்படி மறுமைச் சிந்தனையால் கிடைக்கின்ற எண்ணற்ற நன்மைகளைப் பட்டியலிட்டால், அதன் நீளத்திற்கு வானமே எல்லை!

மேற்சொன்ன ஒவ்வொரு புள்ளியையும் , அறிவியல் பூர்வமாகவும் வரலாற்றுச் சான்றுகளுடன் மெய்ப்பித்துக் காட்ட முடியும். விளக்கத் தொடங்கினால் பெருநூலாய்  விரியும்.

ஆகவே ஒன்றே ஒன்றை மட்டும்- அந்தச் சகோதரர் கூறிய 'மறுமை வறுமையை வளர்க்கிறது  ,, மக்களைரொட்டிக்காக அலைய விடுகிறது ' எனும் கருத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்  .

இஸ்லாம்  கூறும் மறுமைக் கொள்கை, வறுமையை வளர்க்கவில்லை. மாறாக, சமுதாயத்திலிருந்து வறுமையை அடியோடு ஒழித்துக் கட்டியது என்பதுதான் வரலாறு  தரும் பாடம். இஸ்லாமியப் பொருளியல் திட்டத்தில்- அதாவது வறுமை ஒழிப்புத் திட்டத்தில் முக்கியமானது ஜகாத். இந்த ஜகாத் என்பது என்ன? வசதி படைத்த பணக்காரர்கள் தங்களின் தேவைப் போக எஞ்சியுள்ள செல்வத்திலிருந்து ஆண்டுதோறும் இரண்டரை சதவீதம் ஏழைகளுக்காக வழங்கிட வேண்டும் இதுதான் ஜகாத்.

இறைவன்  கூறுகின்றான் ..
''உறவினர்களுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்களுக்குரிய உரிமையை வழங்கிவிடுங்கள். ''
[17..26]

''உங்களுடைய தேவைக்குப் போக மீதமுள்ளதை [இறைவழியில்] செலவு செய்யுங்கள்.''[2..219]

''அவர்களுடைய செல்வங்களில் யாசிப்பவர்களுக்கும், இல்லாதர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட உரிமையிருக்கிறது  [அவற்றை முறைப்படி வழங்கிவிடுங்கள்] .'' [70..24,25]

''செல்வம் உங்களிலுள்ள செல்வந்தர்களிடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது.'' [59..7]

இஸ்லாம் விதித்துள்ள ஐந்து கட்டாயக் கடமைகளில் ஜகாத்தும் ஒன்று.  வசதி இருந்தும் ஜகாத் தராதவர்கள் முஸ்லிம்களே அல்லர். இந்தத் தொகையை யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று இறைவனே  குர்ஆனில் பட்டியல் இட்டுத் தந்துள்ளான்.

ஜகாத் கொடுக்காதவர்கள் மறுமையில் என்ன கதிக்கு ஆளாவார்கள் என்பதைக் குர் ஆன்  இப்படிக் கூறுகிறது.

''எவர்கள் தங்கத்தையும் , வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு, அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது எனும் செய்தியை அறிவித்துவிடுங்கள்  . ஒருநாள் வரும். அந்நாளில் இதே தங்கமும், வெள்ளியும் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, பிறகு அவற்றால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும் சூடு போடப்படும் . இவைதாம் நீங்கள் சேகரித்து வைத்திருந்த கருவூலங்கள். எனவே நீங்கள் சேகரித்து வைத்திருந்த செல்வத்தைச் சுவையுங்கள். '' [9..35]

அதேபோல் ஜகாத் அளிப்பவர்களுக்கு கிடைக்கும் நற்கூலியையும் இறைவன் குறிப்பிடுகிறான்..  ''யார் ஜகாத்தை வழங்குகிறார்களோ, அவர்களுக்கே என் அருள் வளங்களை உரித்தாக்குவேன். ''[7..156]

மறுமையின் தண்டனையிலிருந்து தப்பிக்கவும், ஈடு இணையற்ற அந்த இறையருளைப் பெறவும்தான், முஸ்லிம்கள் ஜகாத்தையும், தான தர்மங்களையும் வாரி வழங்குகிறார்கள்.

கலீஃபா உமர் பின் அப்துல் அஜீஸ் அவர்களின் ஆட்சிக் காலம். அரசுக் கருவூலத்தில் ஏராளமான ஜகாத் பொருள்கள் குவிந்திருந்தன. கருவூல அதிகாரிகள் அவற்றைச் சுமந்துக்கொண்டு தெருத் தெருவாக அலைகிறார்கள் ஏழைகளைத் தேடி  . ஆனால் ஊரில் ஓர் ஏழைகூட  இல்லை. வறுமை வாய்ப்பட்டவர்கள் யாருமே இல்லை. அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள். பிறகு கலீஃபாவின் உத்தரவுப்படி அந்தப் பொருள்கள் பக்கத்து ஊர்களுக்கும், நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

பார்த்தீர்களா , மறுமைச் சிந்தனை சமுதாயத்தில் வறுமையை எப்படி விரட்டி அடித்தது என்று. மார்க்கப் பேரறிஞர் டாக்டர் கே.வி. எஸ் . ஹபீப் முஹம்மது அவர்கள் தமது சொற்பொழிவுகளில் அடிக்கடி ''இம்மையைத் துறக்காதே! மறுமையை மறக்காதே! ' என்று கருத்தை வலியுறுத்துவார்.

ஆம்..! மறுமையில் வெற்றி எனும்  உன்னதக் கொள்கையை முன்வைத்து இம்மை வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது இஸ்லாம் கூறும்  பண்பாடுகளில் முதன்மையானதாகும்.
நன்றி.. சிராஜூல் ஹசன்
நன்றி.. நர்கிஸ்
அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!!!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!