அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, ஏப்ரல் 25, 2015

பெருமை கொள்ளாதவர்

பெருமை வேண்டாம்! பொறுமை வேண்டும்!
கருவம் வேண்டாம்! ஆர்வம் வேண்டும்!
ஆணவம் வேண்டாம்! நல்ல ஆன்மா வேண்டும்!
அல்லாஹ்வின் திருபெயரால்...

உண்மை முஸ்லிம் பெருமையடித்து மக்களிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டார், ஆணவம் கொள்ளமாட்டார். ஏனெனில் அருள்மறையின் வழிகாட்டால் அவரது இதயத்திலும், உயிரிலும் கலந்துள்ளது. இந்த அழியும் உலகில் பெருமையும் ஆணவமும் அகம்பாவமும் கொண்டிருப்பவர் என்றென்றும் நிரந்தரமாக மறுமை நாளில் பெரும் நஷ்டத்தைச் சந்திப்பார். என  அல் குர்ஆன் எச்சரிக்கை விடுக்கிறது.


[மிக்க பாக்கியம் பெற்ற] மறுமையின் வீட்டையோ பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக்கி விடுவோம். ஏனென்றால் முடிவான நற்பாக்கியம் பயபக்தி உடையவர்களுக்குதான்.
[அல் குர்ஆன்.. 28-83]

கர்வம் கொண்டு தற்பெருமை அடிப்பவர்களையும் மக்களிடம் தங்கள் முகத்தை சுருக்கிக் கொள்பவர்களையும் பூமியில் அகந்தையுடன் நடந்து செல்பவர்களையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

[பெருமை கொண்டு] உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே ! பூமியில் பெருமையடித்துக்கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் யாவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
[அல் குர்ஆன் ..31-18]

நபி [ஸல்] அவர்களின் பரிசுத்த வழிமுறையை ஆராய்ச்சி செய்பவர் பெருமையை மனதிலிருந்து வேரோடு துண்டித்தெரிய வேண்டும். இது பற்றிய எச்சரிக்கைகளைப் பார்க்கும்போது நிச்சயமாக அவர் திகைத்து விடுவார்.

நபி [ஸல்] அவர்கள், பெருமையடிப்பவர்களை கண்டித்தது மட்டுமல்லாமல், அது அணுவளவு உள்ளத்தில் குடிகொண்டாலும் சுவன பாக்கியத்தை இழந்து மறுமையில் மிகப் பெரிய நஷ்டத்திற்குள்ளாகி விடுவார்கள் என எச்சரிக்கையும் செய்துள்ளார்கள்.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. ''எவருடைய இதயத்தில் அணுவளவு பெருமை இருக்கிறதோ அவர் சுவனம் புகமாட்டார்.'' ஒரு மனிதர் கேட்டார், ஒருவர் தனது ஆடைகள் , பாதணிகள் அழகாக இருக்க வேண்டுமென விரும்புகிறார். [அது பெருமையடிப்பதாகுமா?] நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. அல்லாஹ் அழகானவன். அழகாக இருப்பதையே விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறுப்பதும், மனிதர்களை இழிவாக எண்ணுவதுமாகும் . 
ஆதாரம்..முஸ்லிம்]

மேற்க் கூறிய ஹதீஸை நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும். 

ஹாரிஸா இப்னு வஹப் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. நபி [ஸல்] அவர்கள் கூற நான் கேட்டேன்   ''உங்களுக்கு நரகவாசியைப் பற்றி அறிவித்துத் தரட்டுமா? அவர் யாரெனில் மிகக் கடுமையானவரும், அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவருமாவார்.''
ஆதாரம்.. புகாரீ ]

ஆணவம் கொண்டோரை அல்லாஹ் மறுமைநாளில் பார்க்க மாட்டான் என்பதே அவர்களை  இழிவுபடுத்தப் போதுமானதாகும். பூமியில் அவர்கள் பெருமையடித்துத் திரிந்து  மக்களிடம் ஆணவமாக நடந்து கொண்டதன் காரணமாக அவர்களோடு பேசவும் மாட்டான். அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். இது மறுமையில் வர்களுக்குக் கிடைக்கும் உணர்வுப் பூர்வமான இழிவாகும். இது நரகில் வீசி எறியப்பட்டு வேதனை செய்யப்படும் உடல் ரீதியான துன்பத்தைவிட சற்றும் குறைந்ததல்ல.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. 'எவன் தனது ஆடையைப் பூமியில் பெருமையுடன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் பார்க்க மாட்டான். ''

மேலும் கூறினார்கள்..  ''மூன்று நபர்கள், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களைப்  மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. அவர்கள்  விபச்சாரம் புரியும் வயோதிகன், பொய்யானான  அரசன் , பெருமையடிக்கும் ஏழை.''
ஆதாரம்..புகாரீ, முஸ்லிம் ]]]

ஏனெனில் பெருமை என்பது அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்றாகும். அது பலவீனமான மனிதனுக்குத் தகுதியானதல்ல. பெருமையடித்துத் திரிபவர்கள் அல்லாஹ்வின் இறைமைத் தன்மையினுள் வரம்பு மீறுபவர்கள் ஆவர் . மகத்தான படைப்பாளனின் மேன்மைமிகு பண்புடன் மோதக் கூடியவர்களாவர். இதனால்தான் நோவினை தரும் வேதனைக்கு உரியவர்களாகிறார்கள்.

''கண்ணியம் எனது கீழாடை, பெருமை எனது மேலாடை அந்த இரண்டில் எதையேனும் என்னிடம் பறித்துக்கொள்ள முற்பட்டால் அவரை நரகில் போட்டு வேதனை செய்வேன்'' என அல்லாஹ்  கூறியதாக நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்.. முஸ்லிம்]

இதனால்தான் நபி [ஸல்] அவர்களின் பரிசுத்த வழிமுறையில் இதுகுறித்து எச்சரிக்கைகள் தொடர்ச்சியாக வந்துள்ளன.  பலவீனமான மனித இயல்புக்கு ஏற்ப ஏதேனும் ஒரு வினாடியில் கூட அகந்தை எனும் நோய் உள்ளத்திற்குள் புகுந்துவிடாமல் முஃமின்கள் காத்துக் கொள்ள வேண்டும்.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் ..  'எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹ்வை சந்திக்கும் நாளில் அல்லாஹ் அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்.
ஆதாரம்.. அல்  அதபுல் முஃப்ரத் ]

அல்லாஹ் நம் அனைவரையும் இந்த நோயை விட்டு காப்பாற்றுவானாக!
நம் அனைவரையும் பணிவுடன் நடப்பதற்கு அருள் செய்வானாக!
நம் அனைவரையும் நல்ல சாலிஹான கூட்டத்தில் சேர்த்து அருள் புரிவானாக! ஆமீன்................**************************************************
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!