ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2015

பிழை பொருத்தருள் ரஹ்மானே!

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்.....

அல்லாஹ் கிருபையாளவன் , கருணையாளவன் பாவங்களை மன்னிக்கக் கூடியவன். 
உங்கள் பாவங்களுக்கும் இன்றே பாவமன்னிப்புக் கோருங்கள்! அதை தள்ளிப் போடாதீர்கள்! யார் நம் வாழ்க்கைக்கு உத்திரவாதம் கொடுக்க முடியும்?
உங்களின் வாழ்வைப் பற்றி நீங்கள் எண்ணிப் பாருங்கள்! உங்கள் வாழ்வில் பெரும் பகுதி சென்று விட்டது. மீதி இருப்பது சிறிது நாட்கள். இப்போது என்ன செய்யப் போகின்றீர்கள்? சென்ற காலத்தைப் போல எதிர்காலத்தையும் வீணிலே கழிக்கப் போகின்றீர்களா? உங்களின் கழிந்து போன வாழ்வு எவ்வளவு அதிகமாக இருந்தது . நீங்கள் ஒருகாலத்தில் மழலை மொழி பேசித் தரையில் தவழந்து விளையாடினீர்கள்! அது ஒருகாலம் ! கடந்த காலம் என்றைக்குமே மீண்டும் திரும்ப போவதில்லை. சென்றுபோன அவ்வளவு நீண்ட நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போய்விட்டது. கிழிந்து போன சீலை ஒன்று ஒரு நூலிழையில் தொங்கிக் கொண்டிருப்பது போல் உங்கள் வாழ்க்கை மிக குறுகிய தவணையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நூலிழை என்றைக்கு அறுந்து விழுமோ! யாருக்குத் தெரியும்.

தௌபா செய்வதை தாமத்திக்காதீர்கள்! தயவு செய்து அலட்சியமாக இருக்காதீர்கள்! கடந்தக் காலத்தை எண்ணிக் கொண்டு இருப்பத்தைவிட எதிர்க்காலத்தை எப்படி கழிப்பது என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! 

தவ்பா என்பது, தான் செய்த பாவத்தை நினைத்து உளமாற வருந்தி, இனிமேல் அப்பாவத்தை செய்ய மாட்டேன் என உறுதி பூண்டு, அல்லாஹ்விடத்தில் கண்ணீர் மல்க அழுது புலம்பி பாவ மன்னிப்பு இறைஞ்சுவதாகும். தான் அறிந்தோ, அறியாமலோ ஒரு பாவத்தை செய்து விட்டால் அதற்காக பச்சாதாபப்பட்டு மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்பதும், அந்தப் பாவத்திற்கு பகரமாக நன்மைகளைச் செய்து விடுவதுமாகும். மனிதன் ஒரு பாவத்தைச் செய்ய நாடும்பொழுது இடது புறம் இருக்கும் கிராமன் காத்திபீன் என்ற மலக்கு எழுதுவதில்லை. மாறாக ஒரு நன்மையைச் செய்ய நாடிவிட்டால் உடனே வலது புறம் இருக்கும் கிராமன் காத்திபீன் என்ற மலக்கு ஒரு நன்மையை எழுதுகின்றார். அந்த நல்ல செயலைச் செய்து விட்டால்  அதற்காக 10 நன்மைகள் எழுதப்படுகிறது. தீமையை செய்துவிட்டால் அதற்கு ஒரு தீமையே எழுதப்படுகிறது. இது அல்லாஹ்வின் மாபெரும் கருணையாகும். ஆகவே நன்மையான காரியங்களைச் செய்ய அவசரம் காட்டுவதும், தீமையை விட்டும் தவிர்ந்து கொள்வதும் முஃமினுக்கு சிறப்புடையதாகும்.

மனிதன்  மரண தருவாயில் இருக்கும் பொழுது அவனது தொண்டைக் குழியை அடையும் வரை அவனது தவ்பாவை அல்லாஹ்  கொள்கிறான். தவ்பா இறைஞ்சும் பொழுது மனமுருகிக் கேட்டு கண்ணீர்த் துளி வந்து விட்டால் அவனுடைய தவ்பா  ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு அடையாளமாகும். தவ்பா இறைஞ்சுவதற்கு முன் ஒழு செய்து கொள்வது, இரண்டு ரக் அத்  நபில் தொழுது கொள்வது, கிப்லாவை முன்னோக்கி அத்தஹியாத்தில் இருப்பதுபோல் மண்டியிட்டு அமர்ந்து கொள்வது, முதலில் அல்லாஹ்வை புகழ்ந்து , அண்ணல் நபி [ஸல்] அவர்கள் மீது சலவாத் கூறி, தான் செய்த குற்றத்தை நினைத்து வருந்தி அழுத வண்ணம் இருப்பது,  நடந்து விட்ட தவறை இனிமேல் செய்ய மாட்டேன் என்று உறுதி பூணுவது, அல்லாஹ் தன் தவ்பாவை ஏற்றுக் கொள்வான் என்று மன உறுதியுடன்  இருப்பது, அல்லாஹ்வின் திருநாமத்தை கூறி கேட்பது  ஆகிய ஒழுங்குமுறைகளைப் பேணி தவ்பா இறைஞ்ச வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை பாவத்திலிருந்து பாதுகாத்து, நல் அமல்கள் செய்ய கிருபை செய்வானாக! [ஆமீன்]

எங்கள் ரப்பே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யா விட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளர்களில் ஆகிவிடுவோம். 
அல்குர் ஆன் ]

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!