சனி, ஆகஸ்ட் 01, 2015

பணம்...! பணம் ...!பணம் ...!

அல்லாஹ்வின் திருபெயரால் .................
பணம் பத்தும் செய்யும் என்பார்கள் . பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.. பணத்தை வைத்து எதையும் வாங்கலாம்.. ஆனால் சில விடயங்களை தவிர ....
பணம் முக்கியமா ..? அல்லது குணம் முக்கியமா என்று ஒருவரிடம் கேட்டால்.. அவன் கூறும் பதில் '' எனக்கு பணம் தான் முக்கியம் ''  குணத்தை வைத்து என்ன செய்ய முடியும் ..? பணத்தை வைத்து எதுவேண்டுமானாலும் செய்யலாம். பணம் பந்தியிலே ! குணம் குப்பையிலே என்று சொல்வார்கள் . இன்று அப்படித்தான் இருக்கிறது! பணத்தின் மதிப்பை தெரிந்தவர்கள். குணத்தின் மதிப்பு, சிறப்பு பற்றி தெரிந்திருக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் திருத்தூதர் அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறிய ஒரு அழகான ஹதீஸை பாருங்கள்!


நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் கூறுகின்றார்கள்.. '' ஆதமின் மகன், எனது பணம்! எனது பணம் ! எனக் கூறுகின்றான். ஆனால், அவன் தம் பணத்தால் பெறுவது மூன்றுதான். 1. உண்டு அழித்தது  2. உடுத்திக் கிழித்தது  3. [சதகா ] கொடுத்து சேமித்தது! மற்றதெல்லாம் அவன் அதைவிட்டு சென்று விடுபவனாகவும், மக்களுக்கு அதைவிட்டு செல்பவனாகவும் இருக்கின்றான்.'' அறிவிப்பாளர் ஹஜ்ரத் அபூஹுரைரா [ரலி] அவர்கள் . ஆதாரம்.. முஸ்லிம்]

மனிதன் பணத்தின் மீது கொண்டுள்ள மோகம் அத்துமீறிய ஒன்றாகிவிட்டது. மனிதனுடைய தேவைக்கு பணம் என்ற போக்குமாறி , பணத்திற்காகவே அவன் படைக்கப்பட்டுள்ளானோ  என்று எண்ணுமளவு அதன் மீது வெறி கொண்டலையும் கும்பல் இன்று கூடிக்கொண்டே போகிறது.

பணத்தின் மீது பற்றும் பாசமும் கண்ணை மறைக்கக் கூடியதாக ஆகிவிட்டதால், அதை அடைய எப்படிப்பட்ட நயவஞ்சகத்துக்கும் சூழ்ச்சிக்கும் அவன் தயார் என்ற முரட்டுத் தனம் வந்துவிட்டது.

பொய் , பித்தலாட்டம் , கலப்படம் மூலம் பணம் பண்ணும் பழக்கம் நாடு தழுவிய ஒரு போட்டியாகவே உருவெடுத்து வருகின்றது. '' இரண்டு பேராசைக்காரர்கள் என்று வயிறு நிரம்பவே மாட்டார்கள். 1. கல்வியில் ஆர்வம் கொண்டவர். 2. பணத்தின் ஆசை அதிகரித்தவர்'' என்று நபிகளார் கூறிய கூற்று எவ்வளவு உண்மை எனபது இன்று தெரிய வருகிறது.

நம் முன்னோர்கள் கல்வியைத்தேடி வெறிக்கொண்டு அலைந்தார்கள். அதை அடையும் வரை அவர்களுக்கு ஊணும்  கிடையாது உறக்கமும் கிடையாது.

யார் யாரோ எப்படி எப்படியோ பணம்  திரட்டுகின்றார்கள். மூட்டைகட்டுகிறார்கள் ,, நமக்கு தேவையில்லை. இஸ்லாமிய பெயர் ஒட்டிக் கொண்டிருப்போருக்கு 'தேவையா இந்த பேராசை?'' என்பது தான் இன்றைய நியாயமான கேள்வி .

பணத்துக்காக எதையும் செய்ய துணிபவர் இஸ்லாத்துக்கு அப்பாற்பட்டவர் என்று நபி [ஸல்] அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

விற்பனையாகிக் கொண்டிருந்த ஒரு உணவுக் குவியலை கடந்து சென்ற நபி, அந்த குவியலில் தமது கையை நுழைத்துப் பார்த்தார்கள் ஈரப்பசை தெரிந்தது. என்ன நண்பரே இது  ? என வினவ  '' மழை பொழிந்தது நாயகமே! என அந்நண்பர் இழுக்கிறார். யார் நம்மில் ஏமாற்றக்கூடியவர் இருக்கின்றாரோ அவர் நம்மைச் சேர்ந்தவர் இல்லை என்று நபி [ஸல்] கடிந்து கொள்கின்றார்கள்.

நமது கண்ணில் சாதாரணமாகத் தெரியும் இந்தத் தவறுக்கு  நபி [ஸல்] அவர்கள் இவ்வளவு கடுமை  காட்டியிருக்கின்றார்கள் என்றால், நாம் எப்படியெல்லாம் பொய்யும் புரட்டும் பேசி பணம்  பண்ணுகின்றோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். 'இருக்கும் வரை அனுபவிப்போம்'' என்ற சித்தாந்தம் நமக்கு ஆகுமா ? என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும் .

சம்பாதிப்பது குற்றமல்ல! அது நபி வழி ! வசதி வாய்ப்பை அதிகரித்துக் கொள்வது ஆகாததல்ல! ஆனால் , இன்றைய தேவை வருங்காலத் தேவை என்பதற்கெல்லாம் ஒரு வரம்பு உள்ளது அல்லவா  ? அதைத் தாண்டலாமா?

விரயமில்லாத உயர்ந்த உணவு உண்பதோ, விகாரமில்லாத இதம் மிகுந்த ஆடை அணிவதோ, அமைதிக்காக அழகான வீடு கட்டி வசிப்பதோ தடுக்கப்பட்டதல்ல, ஆனால் , நமக்கு நம் பிள்ளைகளுக்கும், இப்போதைக்கும், வருங்காலத்துக்கும் தேவையானதைப் பெற சன்மார்க்கம் காட்டிய வழியில் ஈட்டிப் பெறலாமல்லவா ...? பல தலைமுறைக்கு பணம் சேர்த்து வையுங்கள் என்று யார் கூறினார்?  ஒரு பிள்ளை இருந்தாலும், ஒன்பது கோடிக்குச் சொந்தக்காரன், ஒய்யார மாளிகைக்கு உரிமைக்காரன் என்ற புகழைப் பெற்றாக வேண்டும்- என்று எந்த மார்க்கம் கூறியது? பல பங்களாக்களுக்கு உரிமைக்காரன் என்ற பெயரை பெறத்துடிபோர் பற்றி -  
நபிகள் நாயகம்  [ஸல்] அவர்கள் என்ன கூறுகின்றார்கள்,,-

''அல்லாஹ் ஒரு அடியானின் செல்வத்தில் பரகத் செய்யாவிட்டால் அந்தப் பணத்தை அவன் மண்ணிலும் தண்ணீரிலும் அழிக்குமாறு செய்வான்!

பணம் பணமாக மூட்டை கட்டுவதானாலும் பங்களா பங்களாவாக கட்டிப்போடுவதனாலும்... ஏற்படும் விளைவு ! பாட்டன் சம்பாதித்தான்! மகன் பாதியை அழித்தான் ! பேரன் மீதியை ஏப்பம் விட்டான்! என்ற கதைதான் ஊர் தோறும் நாறுகின்றது?  இந்த பாவத்துக்கும் பழிக்கும் யார் காரணமாவார்கள்? நிச்சயம், பணத்தையும் சேர்த்து வைத்து பிள்ளைக்கு நல்போதனை செய்யாத அந்தப் பாட்டன்மார்கள் தான் காரணமானவர்கள்.

உங்களின் பிள்ளைகளைக் கையேந்தும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள் என்றுதான் நபி [ஸல்] அவர்கள் கூறியுள்ளார்களே தவிர, அவர்களுக்கு மூட்டை மூடையாக பணத்தை சேமித்து வைத்து ஊதாரிகளாக உதவாக்கரைகளாக அவர்களை ஆக்குங்கள் என்று கூறவில்லை.

எனவே  பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொள்ளும் வகையில் இஸ்லாத்தின் அளவுகோல் அறிவுரை என்ன? என்பதை நாம் சிந்தித்துபார்க்க வேண்டும். அத்துடன் பணத்தின் அருமை அதை சிரமப்பட்டு ஈட்டுபவர்தான் அறிவார் என்பதயும் நாம் நினைவு கொள்ள வேண்டும். யார் பணமோ- எந்தப் பணமோ என்ற நிலை இருக்குமானால், அந்தப் பணத்தை பொறுத்து அலட்சியம் ஏற்படவே செய்யும்.

பண விஷயத்தில் நமது ஈடுபாடு எந்த ளவு இருக்க வேண்டும் என்பதை பல நபி மொழிகள் விளக்குகின்றன.  '' யார் உலகத்தை [ஒரேடியாக] நேசம் கொள்கின்றாரோ அவர் தமது  மறுமை வாழ்வை பாழாக்கிக் கொள்கிறார். எவர் மறுமையை[ஒரேடியாக] பற்று கொள்கின்றாரோ அவர் தமது உலக வாழ்வை நாசமாக்கிக் கொள்கின்றார். ஆயினும் , ' அழியும் உலகம் விடுத்து அழியா உலக கவனத்தை என்றும் வையுங்கள்' என்று நபிகளார் கூறியதாக  'அஹ்மது'' எனும் நூல் எடுத்துரைக்கின்றது.  அப்படியானால், மறுமையின் ஈடற்ற இன்பத்திற்காக உலகத்தை துறக்க வேண்டியதுமில்லை. இம்மையின் மோகத்தால் மறுமையை உதறிவிடவும் அனுமதியில்லை என்கிற போதனையை இம்மொழி தெளிவு படுத்தி விட்டது.

இம்மையை அனுபவிப்பதாயின் அதன் அளவுகோல் என்ன? என்ற கேள்வியும்  விடை  காணத்தக்கதாகும். ஹஜ்ரத் உதுமான் [ரலி] அவர்கள் , நபி [ஸல்] அவர்கள் நவின்றதாக அறிவிக்கின்றார்கள்..
''ஆதமின் மகனுக்கு அவசியமானது- அவன் வசிக்க வீடு. மானத்தைக் காக்க ஆடை, உண்ண ரொட்டியும், நீரும்!''

ஒரு சராசரி மனிதனுக்கு எது மிகத் தேவை என்பதை எடுத்துக் காட்டிவிட்டது இந் நபிமொழி . இவை ஒருவனுக்கு ஒருங்கே ஒழுங்குமுறையில் கிட்டிவிட்டால், அதுவே அவனுக்கு அமைதியையும் தன்னிறைவையும் தருவதாகும். அதற்கு  மேல் பொல்லாத வழியில் பணத்தாசை கொண்டு அலையக் கூடாது என்ற எச்சரிக்கை தொக்கியதாக இம்மொழி கண்ணுக்குத் தெரிகின்றது. எனவே பணத்தின் அருமையை புரிந்து அதை நேரான வழியில் தேடித் பெற வேண்டும். அதே சமயம், ''பணப்பித்தன்'' என்ற கேலிக்கும் ஆளாகிவிடலாகாது.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!