புதன், மே 04, 2016

நோன்பும்,குர்ஆனும் சிபாரிசு செய்யும்...

நோன்பும், குர்ஆனும்   சிபாரிசு செய்யும்...
அல்லாஹ்வின் திருபெயரால்..
நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றார்கள்.. நோன்பும் குர்ஆனும்   இறைநம்பிக்கையாளர்களுக்காகப் பரிந்துரை செய்யும். நோன்பு கூறும்..  ''என் இறைவா! நான் இந்த மனிதனை பகல் முழுவதும் உண்பதிலிருந்தும் பிற இன்பங்களிலிருந்தும் தடுத்தேன்,, அவனும் அவற்றிலிருந்து விலகியிருந்தான். எனவே என் இறைவா! இந்த மனிதன் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்றுக்கொள்!'' திருக்குர்ஆன் கூறும்.. ''நான் இவனை இரவு உறக்கத்திலிருந்து தடுத்தேன் [தன்  இனிய உறக்கத்தைத் துறந்துவிட்டு இவன் தொழுகையில் திருக்குர்ஆனை  ஓதிய வண்ணமிருந்தான்] எனவே இறைவா! இந்த மனிதனின் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்றுக்கொள்!'' அல்லாஹ்  இவ்விரண்டின் பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்வான்.
அறிவிப்பாளர்.. அப்துல்லாஹ் பின் உமர் [ரலி]
நூல் மிஷ்காத்]



அல்லாஹ்வின் நல்லடியார்களே! பெருமானார் [ஸல்] அவர்களின் உம்மத்துக்கு எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை சிந்திக்கவேண்டாமா! இந்த சந்தர்ப்பத்தை எந்த ஒரு முஸ்லிமும் ஒருபோதும் நழுவ விடக்கூடாது! ஒரு மாதம் அல்லாஹ்வுக்காக நாம் ஏன்  தியாகம் செய்யக் கூடாது!

நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..
''எவர் [நோன்பு நோற்றிருந்தும்] பொய் சொல்வதையும், பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதையும் தாகித்திருப்பதையும் பற்றி அல்லாஹ்வுக்கு எவ்வித அக்கறையுமில்லை.
அறிவிப்பாளர்.. அபூஹுரைரா [ரலி]
நூல்.. புகாரி]

விளக்கம்..****
அதாவது, நோன்பு நோற்பதை கடமையாக்கியதில் அல்லாஹ்வின் நோக்கம் மனிதனை நல்லவனாக விளங்கச் செய்வதேயாகும். அவ்வாறிருந்தும் ஒரு மனிதன் நல்லவனாக மாறவில்லைஎன்றால் , சத்தியத்தின்  அடிப்படையில் தன்  வாழ்க்கைக் கட்டடத்தை  எழுப்பவில்லை என்றால்  , ரமலான் மாதத்திலும் அசத்தியமான -உண்மையற்ற பேச்சுக்களைப் பேசியும், அசத்தியமான  செயல்களைச் செய்தும் வந்தான் என்றால், ரமளானுக்கு பிறகும்கூட அவனது வாழ்வில் உண்மை  காணப்படவில்லை என்றால்,.... இத்தகைய மனிதன் நாம் ஏன்  காலை முதல் மாலைவரை உண்ணாமல் பருகாமல் இருந்தோம் என்று சிந்தித்திட வேண்டும்!
இந்த நபிமொழியின் நோக்கம் இதுதான்.. நோன்பாளி நோன்பு நோற்பதன் குறிகோளையும், அதன் அசல் உயிரோட்டத்தையும் அறிந்திருக்க வேண்டும். மேலும் அவன் எல்லா நேரங்களிலும் நாம் ஏன்  உண்பதையும், அருந்துவதையும் துறந்திருக்கின்றோம் என்பதை உள்ளத்தில் பசுமையாக நினைவு வைத்திருக்க வேண்டும்.
இன்ஷாஅல்லாஹ்  இன்னும் நோன்பின் சிறப்பு தொடரும்...
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!