திங்கள், அக்டோபர் 03, 2016

சூனியக்காரனும், ஈமான் உறுதிமிக்க சிறுவரும்[தொடர்1]

அல்லாஹ்வின் திருப்பெயரால்.......
சூனியக்காரனும், ஈமான் உறுதிமிக்க சிறுவரும்.

படிப்பினை பெறுவதற்கான ஒரு அழகான சம்பவம்! இது கதை அல்ல , உள்ளத்தில் விதைக்கும் ஈமானின் விதை!

ஹஜ்ரத் ஸூஹைப்  [ரலி] அறிவிக்கிறார்கள்.. அண்ணல் நபி [ஸல்] கூறினார்கள்..  உங்களுக்கு முன்னால்  வாழ்ந்த மக்களில் ஓர் அரசர் இருந்தார். அவரிடம் ஒரு சூனியக்காரர் இருந்தார். அவர் வயது முதிர்ந்த பொழுது எனக்கு வயது அதிகமாகிவிட்டது. ஆகவே ஒரு சிறுவரை அனுப்பி வைப்பீராக! நான் அவனுக்குச் சூனியக் கலையைக் கற்றுத் தருகிறேன் என அவர் அரசரிடம் கூறினார். அதனை அரசர் ஏற்றுக் கொண்டு அவரிடம் சூனியத்தை கற்றுக் கொள்ள ஒரு சிறுவரை அனுப்பி வைத்தார்.


பின்னர் [ஒருநாள்] வழியில் [கிறிஸ்துவ] துறவி ஒருவர் சென்றார். அவரிடம் அச்சிறுவர் சென்று அமர்ந்து அவர் கூறுவதைக் கேட்டார். அவர் கூறுவது அவருக்கு பிடித்து விட்டது. அச்சிறுவர் சூனியக்காரரிடம் வந்தால் உடனே அத்  துறவியிடம் சென்று விடுவார்.  பின்னர் சூனியக்காரரிடம் திரும்பி வந்தால் அவரை சூனியக்காரர் அடித்து விடுவார். இதனை அச்சிறுவர் [ஒருமுறை] துறவியிடம் முறையிட்டார். அதற்கவர் சூனியக்காரரிடம் நீ பயந்தால்  என் குடும்பத்தார் என்னைத் தடுத்து வைத்திருந்தனர். [எனது குடும்பத்தாரின் பணிகளில் ஈடுபட்டிருந்தேன்] என்று கூறிவிடு . உன் குடும்பத்தார்களிடம் நீ பயப்படும் பொழுது சூனியக்காரன் என்னைத் தடுத்து வைத்திருந்தான் என்று கூறிவிடு ! எனச் சொல்லித்தந்தார்.

இதற்கிடையே அச் சூனியக்காரர் ஒரு நாள் ஒரு பெரிய வாகனத்தில் வந்தார். அவ் வாகனம் மக்களைத் தடுத்து நிறுத்திவிட்டது. அப்பொழுது அச்சிறுவர் சூனியக்காரர் சிறந்தவரா? துறவி சிறந்தவரா? என்று நான் இன்று அறிவேன் என்று [தனக்குள்] கூறிக் கொண்டார். பின்னர் ஒரு கல்லை எடுத்து இறைவா! சூனியக்காரரின் விஷயத்தைவிட  துறவியின் விஷயம் உனக்கு மிகப் பிரியமானதாக இருந்தால் இவ் வாகனத்தைக் கொன்றுவிடு! மக்கள் போகட்டும் என்று கூறினார். பின்னர் அக் கல்லை வாகனத்தின் மீது எறிந்தார். அவ்வாகனம் இறந்துவிட்டது. மக்கள் சென்று விட்டார்கள்.

பின்னர் அச்சிறுவர் துறவியிடம் வந்து செய்தியைக் கூற அவர்  , ''மகனே! இன்று நீர் என்னை விடச் சிறந்தவர். நான் பார்க்கும் இந்த அளவுக்கு உம்  விஷயம் [சிறப்பான இடத்தை] அடைந்துள்ளது. நிச்சயமாக நீர் [பிற்பாடு] சோதிக்கப்படுவீர்! நீர் சோதிக்கப்பட்டால் எனக்கு அதனைக் கூற வேண்டாம்'' என்று கூறினார்.

அச்சிறுவர் பிரவிக்  குருடரையும், வெண்குஷ்டமுடைவரையும் மற்ற நோய்களை விட்டும் மக்களைக் குணப்படுத்தினார். இதனை அரசவையை சேர்ந்த கண் பார்வையற்ற ஒருவர் கேள்விப்பட்டார். அவர் பல அன்பளிப்புகளுடன் அச்சிறுவரிடம் வந்து  ''நீர் என் கண்பார்வையை குணப்படுத்த வேண்டும்'' என்றார். அதற்கு அச்சிறுவர் நிச்சயமாக நான் யாரையும் குணப்படுத்துவதில்லை . அல்லாஹ்தான் குணப்படுத்துகிறான். நீர் அவனைக் கொண்டு ஈமான் கொண்டால் நான் அவனிடம் துஆச் செய்வேன். அவன் உம்மைக் குணப்படுத்துவான் என்றார்.  அதனை ஏற்று அவர் அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொண்டார். அல்லாஹ் அவரை குணப்படுத்தினான் . பிறகு அவர் அரசவைக்கு வந்து அமர்ந்தார். அப்பொழுது அரசர் அவரிடம் உமக்கு கண் பார்வையை மீண்டும் வழங்கியது யார்?  என்றார். அதற்கவர்  ''என் இரட்சகன்'' என்று பதிலளித்தார். அரசர் உமக்கு என்னைத் தவிர வேறு இரட்சகன் இல்லையே என்று கூற,  ''ஆம்'' என்னுடைய இரட்சகனும் உம்முடைய இரட்சகனும் அல்லாஹ்தான் என்று பதிலளித்தார். உடனே அரசர் அவரைப் பிடித்து கடும் வேதனை செய்யவே, அவர் அச்சிறுவரைப் பற்றி கூறிவிட்டார். உடனே அச்சிறுவர் [அரசவைக்கு] கொண்டு வரப்பட்டார். அரசர் அவரிடம்  , ''மகனே பிறவிக் குருடையும், வெண்குஷ்டத்தையும் வேறு நோய்களையும் குணப்படுத்தும் அளவுக்கு உன் சூனியம் சென்றுவிட்டதே!'' என்று கூறினார். அச்சிறுவர்  ''நான் யாரையும் குணப்படுத்துவதில்லை ,, அல்லாஹ்தான் குணப்படுத்துகிறான்'', என்றார். உடனே அரசர் அச்சிறுவரைப் பிடித்து வேதனை செய்யவே அவர் துறவியைப் பற்றி அறிவித்துக் கொடுத்தார். உடனே அத்துறவி கொண்டுவரப்பட்டார். அவரிடம் உமது மார்க்கத்தை விட்டு நீர் விலகிவிடும் என்று கூறப்பட்டது. அதற்கவர் மறுக்கவே ஓர் இரம்பத்தை அவரது தலையின் நடுவில் வைத்து அறுத்தனர்  அவர் இரண்டு துண்டாகக்  கீழே விழுந்தார்.

இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும் .. இரண்டாம் பகுதியையும் படிக்க மறந்துவிடாதீர்கள்!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!